சாதிய பாகுபாடுகள்..!” மோகன் பகவத் அடுத்து சொன்ன பாயிண்ட்.. உற்று பார்த்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்

மும்பை: ஆர்எஸ்எஸ் ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தலித் மக்களின் ஒற்றுமை குறித்துப் பேசினார். தலித் மற்றும் ஓபிசி பிரிவினரிடையே ஒற்றுமை தேவை என்று குறிப்பிட்ட அவர், எல்லா இந்து பண்டிகளையும் அனைத்து இந்துக்களும் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூரில் கூட்டம் நடத்தப்படும். இதில் நாடு முழுக்க இருந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

மோகன் பகவத்: இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் கலந்து கொண்டு உரையாடுவார்கள். அதன்படி இந்தாண்டு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மோகன் பகவத் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இந்து சமூகத்தில் உள்ள சாதி வேறுபாடுகளைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தி அவர், தலித்துகள் மற்றும் நலிந்த பிரிவினர் ஒன்றிணைய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சில அரசியல் கட்சிகள் தங்கள் சுயநலன்களுக்காக இந்து மதம் பிரிந்து இருக்க உடந்தையாக இருக்கிறது. நமது நாட்டை ஜாதி மற்றும் சமூக அடிப்படையில் பிளவுபடுத்த ஒரு பெரிய இயக்கமே செயல்பட்டு வருகிறது. ஆனால், அதை புறந்தள்ள வேண்டும். இந்து மக்கள் சாதிய வேறுபாடுகளைத் தாண்டி வர வேண்டும்.

இந்து சமூகத்தினர்: துரதிருஷ்டவசமாக இந்த பிளவுகள் துறவிகள் மற்றும் தெய்வங்களுக்கிடையில் கூட ஏற்பட்டுவிட்டது. வால்மீகி ஜெயந்தி ஏன் வால்மீகி காலனிகளில் மட்டும் கொண்டாடப்படுகிறது.. ராமாயணத்தை எழுதிய வால்மீகி முழு இந்து சமூகத்திற்கு முக்கியமானவர்.

வால்மீகி ஜெயந்தி மற்றும் ரவிதாஸ் ஜெயந்தி போன்ற பண்டிகைகளை அனைத்து இந்துக்களும் கூட்டாகக் கொண்டாட வேண்டும். இந்துக்கள் வேறுபாடுகளைக் கடந்து இப்படி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற செய்தியையே ஆர்எஸ்எஸ் அமைப்பு பரப்பி வருகிறது. சமூக நல்லிணக்கம் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதே எங்கள் இலக்கு. சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் இடையே உண்மையான நட்பு அவசியம். நாம் மொழிகள் வேறுபட்டிருக்கலாம், கலாச்சாரங்கள் வேறுபட்டிருக்கலாம், உணவு வேறுபட்டிருக்கலாம், ஆனால் குடும்பங்களிடையே நட்பு வேண்டும்.

கோயில்கள்: கோயில்கள் உள்ளிட்ட பொது இடங்கள் அனைத்து தரப்பு இந்துக்களும் வரும் ஒரு இடமாக இருக்க வேண்டும். பலவீனமான பிரிவினரின் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். சமீபத்தில் கூட ஒரு பகுதியில் வால்மீகி சமூகத்தினரின் பிள்ளைகளை ராஜ்புத் மக்கள் தங்கள் பள்ளியில் இலவசமாகச் சேர்க்க முன்வந்தனர். இதுபோன்ற ஒற்றுமை உணர்வே அதிகம் தேவை” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், திட்டமிட்டு மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி கலாச்சார மரபுகளை காலி செய்ய இங்குச் சிலர் முயன்று வருவதாகவும் அவர் விமர்சித்தார். அதாவது மக்களிடையே தேவையில்லாத அடையாளங்களை உருவாக்கி பிளவுகளை ஏற்படுத்த முயல்வதாக அவர் விமர்சித்தார்.வேறுபாடுகள்: கடந்த லோக்சபா தேர்தலில் தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாக்குகள் பாஜகவில் இருந்து விலகிச் சென்றது. மேலும், ராகுல் காந்தியும் சாதிவாரியான கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டு வரம்பை நீக்குவது குறித்துத் தொடர்ந்து பேசி வருகிறார். இதனால் தலித் மற்றும் ஓபிசி வாக்குகள் மெல்ல பாஜகவில் இருந்து பிரிந்து காங்கிரஸ் பக்கம் செல்ல தொடங்கியுள்ளது. இந்த சூழலில் தலித் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று மோகன் பகவத் பேசியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು