மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை (நவம்பர் 25) காலை 11 மணி அளவில் தொடங்குகிறது. இக்கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம், வக்பு வாரியம், அதானி விவகாரம, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக அரசியல் புயல் வீசும் கூறப்படுகிறது.

நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர்
இக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா, ஜெயராம் ரமேஷ், திருச்சி சிவா மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில், நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் அசாதாரண நிகழ்வுகள் நடந்துள்ளன. பல்வேறு மாநிலங்களில் நடந்துள்ள அரசியல் மாற்றங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. மகாராஷ்ராவில் பாஜக கூட்டணி மகாத்தான வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.
அதே நேரத்தில் ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. மேலும், யூனியன் பிரதேசமாக உள்ள ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை முற்றிலுமாக திரும்பி விட்டது என்று கூற முடியாது. அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நிகழ்வதோடு, ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?
ரத்து செய்யப்பட்ட 370-வது சட்டப்பிரிவை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும. காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், மணிப்பூர் கடந்த சில நாட்களாகவே வன்முறை தீவிரமாகி உள்ளது. மணிப்பூரில் சுமார் 20 மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது.
இதனால் பிரேன்சிங் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு வராதது ஏன் என்று எதிர்க்கட்சி கேள்வி எழுப்பி வருகின்றனர்.