Search
Close this search box.

புயல் உருவாவதில் தொடரும் தாமதம்: 30-ம் தேதி கரையைக் கடக்கும் ஆழ்ந்த தாழ்வு மண்டலம்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதற்கிடையே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அதனைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுவடைந்து இலங்கை மற்றும் டெல்டா கடலோரப் பகுதிகளையொட்டி நிலை கொண்டு இருந்தது.
இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முற்பகலில் புயலாக மாறக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன் நகரும் வேகம் குறைந்ததால், புயலாக உருவாவதில் தாமதம் ஆனது. மழையின் தாக்கமும் குறைந்தது. இந்த சூழலில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில் நீடித்து வருகிறது.

 

இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி (நாளை மறுதினம்) கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன்படி காரைக்கால்- மாமல்லபுரம் இடையே வரும் 30ம் தேதி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைவரப்படி, இலங்கையின் திரிகோணமலைக்கு கிழக்கு-வடகிழக்கில் 100 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 320 கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு தென் கிழக்கே 410 கி.மீ. தூரத்திலும், சென்னை தென் கிழக்கே 490 கி.மீ. தூரத்திலும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கரையோரமாக நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில்புயலாக வலுப்பெற வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு உருவானால் அதற்கு ‘பெங்கல்’ என்ற பெயர் சூட்டவும் முடிவு செய்யப்பட்டது. இந்த புயல் வலுவிழந்து 30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்க உள்ளது. அப்போது 50-60 கி.மீ. வரை பலமான தரைக்காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுகள் காரணமாக இன்று (வியாழக்கிழமை) முதல் 2-ந் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

புயல் சின்னம் காரணமாக, இன்று தமிழக கடலோர மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்திலும், நாளையும், நாளை மறுதினமும் வட தமிழக கடலோரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು