கூடலுார்: கூடலுார் அருகே, சுருக்கு கம்பியில் சிக்கி, 4 வயது ஆண் புலி இறந்தது குறித்து வனத்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கூடலுார் இரண்டாவது மைல் அருகே, செலுக்காடி தனியார் எஸ்டேட் பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் புலி இறந்து கிடந்தது. இது குறித்து அப்பகுதியினர், வனத்துறைக்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.
தொடர்ந்து, முதுமலை கள இயக்குனர் கிருபாசங்கர், கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் ராதாகிருஷ்ணன் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில், சுருக்கு கம்பி கழுத்தில் சிக்கி புலி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து, மோப்ப நாய்கள், அதவை, சார்லி அழைத்து வரப்பட்டு, அதன் உதவியுடன் அப்பகுதியில் வன ஊழியர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், பிரகர்தி அறக்கட்டளை கால்நடை டாக்டர் சுகுமாரன், சேரம்பாடி அரசு கால்நடை டாக்டர் நவீன்குமார் ஆகியோர் அதன் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அதன்பின் புலியின் உடல் எரிக்கப்பட்டது. புலிக்கு சுருக்கு வைத்து கொன்றது தொடர்பாக, வனத்துறையினர் மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் கூறுகையில், ‘இறந்த ஆண் புலிக்கு, 4 வயது இருக்கும். சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளது. தற்போது மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மற்ற விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்,’ என்றனர்.
Author: VS NEWS DESK
pradeep blr