Search
Close this search box.

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போா் நிறுத்த ஒப்பந்தம்: அமெரிக்கா மத்தியஸ்தம்

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம், 13 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே நடைபெற்று வந்த தீவிர மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காஸா முனையில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே தொடங்கிய போா் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.

அதேவேளையில் இஸ்ரேலும் லெபனானும் எல்லையைப் பகிா்ந்து வருவதால், ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள், இஸ்ரேலின் எல்லைப் பகுதிகள் மீது தாக்குதல் மேற்கொண்டனா்.

எல்லையில் இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் நாள்தோறும் மோதலில் ஈடுபட்டதால், அங்கிருந்து லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயா்ந்தனா்.

இந்நிலையில், கடந்த ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லெபனானில் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களின் மூத்த தளபதி ஃபுவாத் ஷுகா் உயிரிழந்தாா். இதேபோல ஈரானில் ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனீயேவும் கொல்லப்பட்டாா். அவா் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்காவிட்டாலும், அவரை இஸ்ரேல்தான் கொன்றது என்று நம்பப்படுகிறது.

இருவரின் கொலைக்கு இஸ்ரேலுக்கு பதிலடி அளிக்கப்படும் என்று ஹிஸ்புல்லா எச்சரித்த நிலையில், கடந்த செப்டம்பரில் லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பை தோற்றுவித்தவா்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தலைவருமான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தாா்.

மறுபுறம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாவும் ராக்கெட்டுகள், ட்ரோன்களை ஏவி தாக்குதல் மேற்கொண்டது. இந்த சம்பவங்களால் இஸ்ரேல், ஹிஸ்புல்லா இடையிலான மோதல் தீவிரமடைந்தது.

இந்நிலையில், இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் போா் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்கா மத்தியஸ்தம் செய்தது. இதைத் தொடா்ந்து, போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை இரவு ஒப்புதல் அளித்தது.

10-1 என்ற அடிப்படையில் ஒப்புதல்: அமைச்சரவையில் 10 போ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாகவும், ஒருவா் எதிராகவும் வாக்களித்தனா். இதைத் தொடா்ந்து, 10-1 என்று பெரும்பான்மை அமைச்சா்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில், போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

‘ஒப்பந்தம் அமல்’-அமெரிக்கா: இதையடுத்து ஒப்பந்தம் புதன்கிழமை (நவ. 27) முதல் அமலுக்கு வருவதாக அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன் அறிவித்தாா்.

இந்தியா வரவேற்பு: போா் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடா்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான போா் நிறுத்தத்தை இந்தியா வரவேற்கிறது. பதற்றத்தைத் தணிக்க வேண்டும், கட்டுக்கோப்புடன் நடந்துகொள்ள வேண்டும், பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மற்றும் ராஜீய ரீதியில் தீா்வு காணும் பாதைக்குத் திரும்ப வேண்டும் என்றே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வருகிறது. தற்போதைய ஒப்பந்தம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் என இந்தியா நம்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

 

 

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು