தமிழகத்தில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அதுதொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதேசமயம் குற்றவாளிகளுக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில், “பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் ‘காவல் உதவி’ (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார். இது ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும். அதுமட்டுமல்லாமல் அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்’ என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் மாணவிகள் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலைக்கழக சம்பவம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர் தான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் அந்தப் பகுதியில் நடை பாதை பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். மிகவும் பிரபலமான அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.
இந்த வழக்கில் மாணவி அளித்த முதல் தகவல் அறிக்கை விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. நாளுக்கு நாள் அண்ணா பல்கலைக்கழக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என காவல் ஆணையர் அருண் நேற்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். இதுவும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்த நிலையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரித்தது. அப்போது விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற முடிவுக்கு காவலாளர் எப்படி வந்தார் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இப்படி ஒரு முடிவுக்கு வந்த பிறகு அவருக்கு கீழ் உள்ள அதிகாரி எப்படி மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிப்பார் எனவும் சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டது.
ஆளுநர் நேரில் ஆய்வு
அதேசமயம் மாணவி புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையில், வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் அரசை குற்றம் சாட்டுவதாக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே அண்ணா பல்கலைக்கழக வேந்தரான தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை நேரில் பல்கலைக்கழகம் சென்று ஆய்வு செய்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி அளித்த வாக்குமூலத்தில் ஞானசேகரன் யாரிடமோ செல்போனில் சார் எனக் குறிப்பிட்டு பேசியதாக குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கும்போது காவல் ஆணையர் ஒருவர் தான் குற்றவாளி என தெரிவிக்கிறார். இந்த சம்பவத்தில் மற்றொரு குற்றவாளி காப்பாற்ற தமிழக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Author: VS NEWS DESK
pradeep blr