மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க நாடகமாடினாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுதா எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரித்த மேயர்
அதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வம், மதிமுக கவுன்சிலர் பிரதீபா உள்ளிட்டோரும் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பது குறித்து மேயர் சரவணனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற உறுப்பினர் தஞ்சாவூர் எம்.பி., சுதா மக்களை சந்திப்பதற்காக மாநகராட்சி ஏற்பாட்டில் அலுவலகம் அமைத்து தரவேண்டும் என மேயருக்கு தபால் கொடுத்துள்ளதற்கு பதில் அளிக்காதது பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மேயர் சரவணன் அது சாதாரண கடிதம் தான். முறையாக எனக்கு பதிவு தபாலில் வரவில்லை. எனவே அந்த கடிதத்திற்கு என்னால் பதில் கூற முடியாது என தெரிவித்தார். இதனால் அதிருப்தியடைந்த அய்யப்பன், நீங்கள், சுதா எம்.பி., நான் ஆகிய 3 பேரும் ஒரே கட்சியில் இருந்தும் எம்.பி.யின் வேண்டுகோளை நிராகரிக்கிறார்களா எனக் கூறி வெளிநடப்பு செய்தார்.
கவுன்சிலர்கள் கேள்வி மேல் கேள்வி
இப்படியான நிலையில் மேயரிடம், 10க்கும் மேற்பட்ட திமுக கவுன்சிலர்கள் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட கோப்புகள் எங்கு இருக்கிறது . அதில் நீங்கள் கையெழுத்திட்டீர்களா? என கேள்வி எழுப்பினர். இதனால் கோபமடைந்த மேயர் சரவணன், கோப்புகள் என்னிடம் தான் இருக்கிறது. இந்த கூட்டம் தற்போது ஒத்திவைக்கப்படும் நிலையில் கோப்புகளை நாளை நான் கொண்டு வந்து காட்டுகிறேன் என்று கூறினார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத மற்ற கவுன்சிலர்கள் நாங்கள் அனைவரும் விடிய விடிய இங்கேயே வேண்டுமானாலும் அமர்ந்திருக்கிறோம்.
கோப்புகளை காட்டிவிட்டு தான் இங்கிருந்து செல்ல வேண்டும் என கறாராக தெரிவித்தனர். நீங்கள் கையெழுத்திடாமல் கோப்புகளை வைத்திருப்பதில் ஏதோ மர்மம் உள்ளது என்று மேயரிடம் சொல்ல அவர் பதில் கூற முடியாமல் திணறினார். அடுத்த சில நிமிடங்களில் மேயர் சரவணன் தனது நாற்காலிக்கு பின்புறம் இருந்த ஓய்வு அறைக்கு வேகமாக ஓடினார். ஆனால் கவுன்சிலர் குட்டி தட்சிணா மூர்த்தி ஓடிச் சென்று ஓய்வு அறைக்குள் மேயரை செல்ல விடாமல் தடுத்தார். மேலும் தரையில் அமர்ந்து கோப்புகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து மற்ற கவுன்சிலர்களும் மேயர் சரவணனை சூழ்ந்தனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறிய மேயர் சரவணன் திடீரென நெஞ்சு வலி என கூறி கூட்ட அரங்கில் தரையில் விழுந்து காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மேயர் சரவணன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Author: VS NEWS DESK
pradeep blr