ஓஹியோ மாகாண ஆளுநர் பதவி: விவேக் ராமசுவாமி போட்டி

வாஷிங்டன் : இந்திய அமெரிக்க தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசுவாமி ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்குப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அமெரிக்கத் தொழிலதிபர் விவேக் ராமசுவாமி (39) கடந்தாண்டு குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்வு பட்டியலில் இருந்தார். இந்த நிலையில், டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் அரசின் செயல்திறன் துறைக்கு எலான் மஸ்க்குடன் இணைந்து விவேக் ராமசுவாமி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. விவேக் ராமசுவாமி சின்சினாட்டி நகரில் இந்தியப் பெற்றோருக்கு பிறந்தார். இவர் ஹார்வார்டு மற்றும் யேல் பல்கலைக்கழகங்களில் படித்தவர்.

டிரம்ப்பின் நம்பிக்கைகுரியவராக அறியப்படும் விவேக் ஓஹியோ மாகாணத்தின் ஆளுநராகப் போட்டியிட இருப்பதாகவும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. அரசின் செயல்திறன் துறையை வெற்றிகரமாக செயல்படுத்துவதும், ஓஹியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிடுவதுமே விவேக் ராமசுவாமியின் தற்போதைய குறிக்கோள் என்றும், அந்த முடிவில் எந்த மாற்றமும் இன்றி அவர் அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை வெளியிடுவதற்கான அதிகாரப்பூர்வ வரைவு தயாராக உள்ள நிலையில், விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஓஹியோ மாகாணத் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. விவேக் ராமசுவாமி வெற்றி பெற்றால் தற்போதைய ஆளுநர் மைக் டிவைனுக்கு மாற்றாக அவர் ஆளுநராக பதவியேற்பார்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr