Tamil Nadu Budget 2025 : மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்
சென்னை, மார்ச் 14: 2025ம் ஆண்டு மார்ச் 14ம் தேதியான இன்று 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (Tamil Nadu Budget 2025) தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) இன்று தாக்கல் செய்து வருகிறார். இதில் பல்வேறு துறைகளில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக கல்வித்துறையில் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்டதோடு, புதிய அறிவிப்புகள் வெளியாகின. அதில் குறிப்பாக, ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட உதவித்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளது.
அதாவது, மத்திய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டிலிருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு, அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு, மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்விற்குத் தயாராகும் இளைஞர்களுக்கு 50,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மேலும், மூவலூர் ராமமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்திற்கு வரும் நிதியாண்டில் செயல்படுத்திட ரூ.420 கேடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் உயர்கல்வியில் சேரும் மாணவியர்களின் எண்ணிக்கை சென்ற கல்வியாண்டில் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழ்நாட்டின் முத்திரை பதிக்கும் திட்டங்களில் ஒன்றான ‘தோழி’ பணிபுரியும் மகளிர் விடுதிகள் ஏற்கெனவே தாம்பரம், திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் 1,303 மகளிர் பயன்பெறும் வகையில் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. எதிர்வரும் நிதியாண்டில், காஞ்சிபுரம், ஈரோடு, கரூர் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட மேலும் 10 இடங்களில் 800 பெண்கள் பயன்பெறும் வகையில் 77 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தங்கம் தென்னரசு கூறினார்.
மேலும், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திடும் நோக்கத்துடன், நாட்டிற்கே வழிகாட்டும் வகையில், மாவட்டந்தோறும் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது என்றார்.
(மேலும் தகவல்கள் அப்டேட் செய்யப்படுகிறது)