சென்னை: நடிகர் ஜெயம் ரவி மும்பையில் செட்டிலாக உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், அது உண்மையா? இல்லை வெறும் வதந்தியா? என்பது பற்றிய ஒரு விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.
நடிக்க வந்த காலங்களில் பார்க்கப் பக்கத்து வீட்டுப் பையன் போல இயல்பாக இருக்கிறாரே? யார் இவர் என்று பேசப்பட்ட ஜெயம் ரவி, கடந்த சில மாதங்களாக மனைவியை விட்டுப் பிரிவது தொடர்பாக நிறையச் செய்திகளில் அடிப்படுகிறார். சினிமாவில் நடிக்க வந்தது முதல் மிஸ்டர் க்ளீன் என்று பெயர் எடுத்தவர். இந்தப் பிரிவால் மனதளவில் அவர் நிறைய இழப்புகளைச் சந்தித்து இருக்கிறார்.
தனது மனைவியை விட்டுப் பிரியும் முடிவை எடுத்த பிறகு அவரது ‘பிரதர்’ திரைப்படம் வெளியாகிறது. அதேபோல் மனைவியைப் பிரிந்து முதல் தீபாவளியை எதிர்கொள்கிறார். ஆனாலும் பொதுவெளியில் பேசும்போது நம்பிக்கை குறையாமல் உற்சாகமாகப் பேசி வருகிறார் ரவி.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் தன்னைப் பற்றி தனது மன உணர்வுகள் பற்றி நிறையப் பேசி இருக்கிறார். உண்மையில் ஜெயம் ரவி யார்? அவர் வாழ்க்கை எப்படிப்பட்டது? எனப் பல உண்மைகளை உடைத்துப் பேசி இருக்கிறார். ஜெயம் ரவி பேசுகையில், “பணம் என்பது வசதிக்குத்தான் முக்கியம். வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை. வசதியான சோஃபா வாங்க முடியவில்லை என்றா மரக் கட்டில் போதும். எனவே பணம் என்பது ஆடம்பரமாக வாழத்தான் தேவை. மற்றபடி உயிர்வாழ அடிப்படைத் தேவை இருந்தால் போதும்.
3 கோடி காரில் போக போகிறோமா? இல்லை 1 லட்ச ரூபாய் காரில் போகப் போகிறோமா அதை வைத்துத்தான் பணம் என்பதன் முக்கியத்துவம் இருக்கிறது. வெறும் பயணம் மட்டும்தான் நம் கையில் இருக்கிறது. அது சாதாரண பேருந்தில் போனால் என்ன ஆடம்பரமான காரில் போனால் என்ன?
பணம் என்பதை நான் குழந்தையாக இருக்கும்போதே நிறையப் பார்த்துவிட்டேன். என் அப்பா பயங்கரமாகச் சம்பாதித்தார். கட்டுக்கட்டாக நிறையப் பார்த்திருக்கிறேன். அதன் மீது எனக்குப் பெரிய ஈடுபாடு கிடையாது. இருப்பதை வைத்து நம்மால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை என்றால், எவ்வளவு வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியாது. இருப்பதை வைத்து சந்தோஷமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப் பார்த்தால் 10ரூபாய் இருந்தாலும் சந்தோசமாக வாழ கற்றுக்கொள்வோம்.
ஒரு நடிகனாக நம் உடம்பும், தோற்றமும் முக்கியம். ஒரு கஷ்டம் என்று வந்தால் நான் இரண்டு வகையாக யோசிப்பேன். கையில் பணம் இல்லை என்றால் என்ன செய்வது என சீரியஸாக யோசிப்பேன். உடனே அதை காமெடியாகவும் யோசித்துப் பார்ப்பேன். பணம் தானே இல்லை? உயிர் இருக்கு? கை கால் இருக்கிறது. தில் இருக்கிறது. சம்பாதிக்கலாம் என ஜாலியாக பின் கடந்து போவேன்.
இப்படி இரண்டு விதமாக யோசிப்பது எனக்குப் பல நன்மைகளைக் கொடுத்திருக்கிறது. அனைவரும் மனிதர்கள்தான். நம் மனதில் உள்ள துயரங்கள் முகத்தில் வெளிப்படும். அது திரையில் தெரியும். எனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் நின்றால் என்னை மறந்துவிடுவேன். என் பிரச்சினைகள் என் மனதிற்கு வராது. நடிப்பில்தான் மனம் முழுக்க இருக்கும்.
உலகம் ஆயிரம் சொல்லும். ஊர் ஆயிரம் சொல்லும். ஆனால், நம்மை நம்புகின்றவர்கள் எனச் சில பேர்தான் இருப்பார்கள். அது நண்பர்களாக இருக்கலாம், குழந்தைகளாக இருக்கலாம். வேறு யாராகக்கூட இருக்கலாம். அவர்கள் முன்பு நாம் என்றும் தலைகுனிந்துவிடக்கூடாது. அவர்கள் முன் நிமிர்ந்துதான் நிற்க வேண்டும். நான் எப்போது நேர்மையாக இருக்க வேண்டும் என நினைப்பேன். நண்பர்கள் ஒரு தவறு செய்தால் அதை மூடி மறைக்காமல் உடனே சுட்டிக்காட்டுவேன். ஜால்ரா அடிக்க மாட்டேன்.
வாழ்க்கையில் நான் நானாக இருக்கவேண்டும். அது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டம். மற்றவர்களுக்காக நம்மை நாம் கொஞ்சம் மாற்றிக்கொள்ள நேரிடம். அவர்கள் மனமும் கோணாமல் நம் சுயத்தையும் இழக்காமல் வாழ்வது தான் பெரிய சவால். அதை என் வாழ்க்கையில் நான் கூடுமான வரை கடைப்பிடித்து வருகிறேன். நீங்கள் உண்மையைச் சூழ்ச்சி செய்து மாற்ற முடியாது.
God is nothing but truth. சரி, தவறு என்று ஒரு தராசு இருக்கிறது. அதில் உள்ள உண்மைதான் இறைவன். நான் அப்படித்தான் பார்க்கிறேன். எனக்கு ஐயப்பனைப் பிடிக்கும். அவர் ஜாதி, மதம் இல்லாத கடவுள் என்று சொன்னார்கள். ஆகவேதான் மாலை போட ஆரம்பித்தேன். கடந்த 6 வருடங்களாக மாலை போடுகிறேன். அதில் எனக்கு ஒரு விருப்பம் இருக்கிறது.
வரும் காலங்களில் என் சொந்த வாழ்க்கை பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன். அதற்கு ஒன்லைஃப் என்று பெயர் வைத்திருக்கிறேன். அதில் உண்மைகளைச் சொல்வேன். யாரையும் காயப்படுத்தாமல் கூட நாம் உண்மையைச் சொல்ல முடியும். அப்படிச்சொல்வேன்” என்று பேசி இருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர் மும்பையில் செட்டில் ஆகப் போவது பற்றிய விளக்கத்தை அளித்துள்ளார்.
ரவி பேசுகையில், “பாலிவுட்டில் நடிப்பதற்காகப் பேச்சு வார்த்தை போய்க் கொண்டிருக்கிறது. 2 புராஜெக்ட் பேச்சுவார்த்தை அளவில்தான் இருக்கிறது. இன்னும் எதுவும் உறுதியாகவில்லை. அதன்பின்னரே இங்கே இருப்பேனா? மும்பை போனேனா என்பது முடிவாகும். அதைப் பற்றி இப்போதே உறுதியாக எதையும் சொல்ல முடியாது” என்கிறார்.