கீவ்: ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு மத்தியில் உக்ரைனில் கட்டாய ராணுவ சேவைக்கான வயது என்பது 27 ல் இருந்து 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திருமண நிகழ்ச்சி, நைட் கிளப், மதுபான விடுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தி அதிகாரிகள் இளைஞர்களை ராணுவ பணிக்கு அழைத்து செல்வதால் அந்த நாட்டு ஆண்கள் அச்சமடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இரண்டரை ஆண்டுகள் கழித்தும் கூட இன்னும் போர் முடியவில்லை. ரஷ்யா படைகள் உக்ரைனில் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 10,582 உக்ரைனியர்கள் பலியாகி உள்ளனர்.
ஆனாலும் கூட ரஷ்யாவுக்கு, உக்ரைனும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவிகள் செய்து வருகின்றன. இதனால் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத்துறையில் சிறந்து நிற்கும் ரஷ்யாவை உக்ரைன் தொடர்ந்து சமாளித்து வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடந்து வரும் போரில் ரஷ்யாவிடம் உக்ரைன் சரண் அடையாமல் இருக்க இது தான் முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஏராளமான உக்ரைன் படை வீரர்கள் மரணமடைந்துள்ளனர். இதனால் உக்ரைன் நாட்டின் ராணுவத்தில் அதிகளவில் இளைஞர்கள் சேர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனை பொறுத்தவரை இளைஞர்கள் ராணுவனத்தில் சேவையாற்றுவது கட்டாயமாக உள்ளது. தற்போதைய போர் நடவடிக்கையால் ராணுவத்தில் இணையும் இளைஞர்களின் குறைந்தபட்ச வயதை 27 ல் இருந்து 25 ஆக குறைத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி 25 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் கட்டாயம் ராணுவ பணி செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அந்த சட்டத்தின்படி 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் வெளிநாடுகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கூட தற்போது தொடர்ந்து வரும் போரால் உக்ரைன் ராணுவத்தில் இளைஞர்கள் சேராமல் தவிர்த்து வருகின்றனர். கட்டாய ராணுவ சேவைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை அவர்கள் பூர்த்தி செய்யாமல் தவிர்த்து வருகின்றனர்.
ராணுவத்தில் சேர்ந்தால் ரஷ்யாவுக்கு எதிரான போரில் தங்களின் உயிர் போய்விடும் என்ற அச்சத்தில் இளைஞர்கள் ராணுவத்தில் சேர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் உக்ரைன் சிக்கலில் மாட்டி உள்ளது. இதற்கிடையே தான் ராணுவ அதிகாரிகள் தற்போது இளைஞர்களை வலுக்கட்டாயமாக ராணுவத்தில் இணைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி உக்ரைன் நாட்டில் நடக்கும் திருமண நிகழ்ச்சி, பார்கள், நைட் கிளப் உள்ளிட்டவற்றில் ராணுவ அதிகாரிகள் திடீரென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு வரும் இளைஞர்களின் பெயர் விபரங்களை வைத்து அவர்கள் கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டுள்ளனரா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து வருகின்றனர். கட்டாய ராணுவ சேவையில் ஈடுபடாதவர்களை உடனடியாக அழைத்து சென்று ராணுவத்தில் இணைத்து வருகின்றனர். இதனால் உக்ரைனில் உள்ள 25 வயது முதல் 60 வயது நிரம்பிய ஆண்கள் பயந்துபோய் உள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr