Search
Close this search box.

முடிவுக்கு வந்த சாம்சங் ஊழியர்களின் ஸ்டிரைக்! இன்று மீண்டும் பணிக்கு திரும்பிய பணியாளர்கள்!

சென்னை: சிஐடியு சங்கம் அமைத்தல், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் சுங்குவார்சத்திரம் சாம்சங் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். நிர்வாகம், அரசு மற்றும் சிஐடியு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதையடுத்து ஸ்டிரைக்கை கைவிட்டு ஊழியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்பியுள்ளனர்.

சர்வதேச அளவில் இந்தியாவுக்கான வளர்ச்சி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சீனாவின் வளர்ச்சியை மட்டுப்படுத்த, இந்தியாவை புதிய வளர்ந்த நாடாக மாற்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனவே, புதிய நிறுவனங்கள் இந்தியாவில் காலூன்றி வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் நலச்சட்டங்களை உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று ஊழியர்கள் போராட தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் சுமார் 1800 பேர் நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்றனர். இங்கு வேலை நேரம், விடுப்பு, உரிய ஊதியம் உள்ளிட்டவற்றில், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகள் பின்பற்றப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன. உதாரணத்திற்கு இந்தியாவில் 8 மணி நேரம் அமலில் இருக்கிறது. ஆனால், இந்த தொழிற்சாலையில் இது பின்பற்றப்படுவதில்லை.

அதோபோல, அடிப்படை ஊதியம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படுவதில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. எனவே, தொழிலாளர்கள் 1500 பேர் சேர்ந்து சிஐடியு தொழிற்சங்கம் அமைத்தனர். இந்த சங்கத்தை பதிவு செய்ய வேண்டியது தொழிலாளர் நலத்துறையின் பணி. புதிதாக சங்கம் அமைக்கப்பட்டால், அது பதிவு செய்ய விண்ணப்பிக்கப்படும் போது 45 நாட்களுக்கு பதிவு செய்ய வேண்டும். அல்லது, இன்ன காரணங்களுக்காக பதிவு செய்ய முடியாது என்று விண்ணப்பத்தை ரத்து செய்ய வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தொழிலாளர் நலத்துறை மேற்குறிப்பிட்ட இரண்டையும் செய்யாமல் இழுத்தடித்தது.

.இதனால் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைப்பது என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமை என அரசியலமைப்பு சட்டம் 19 சரத்து 1ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படி இருப்பினும், ஏன் சங்கத்திற்கான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மறுபுறம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கும் தொடுத்திருக்கிறது. இது குறித்த விசாரணை விரைவில் வர இருக்கிறது. இந்நிலையில் வேலை நிறுத்தத்தை கைவிடுவது, பணிக்கு திரும்புவது குறித்து அரசு தரப்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது. இதில் சிஐடியு, சாம்சங் நிர்வாகிகள், ஊழியர்கள், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இறுதியாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இதில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனையடுத்து தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்பியுள்ளனர். நிறுவனம் தரப்பில், “நிறுவனத்திற்கு எதிரான நடவடிக்கைகள் கூடாது” என்று தொழிலாளர்களிடம் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. அதேபோல தொழிலாளர்கள் தரப்பில், “ஸ்டிரைக் நடத்தியதற்காக பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது” என்று நிறுவன அதிகாரிகளிடம் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು