சூடுபிடிக்கும் ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம்! பிரதமர் மோடி இன்று பரப்புரை!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பறிவிட வேண்டும் என பாஜக, புதிய வியூகத்துடன் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று இரண்டு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொள்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீப காலமாக அரசியல் சலசலப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்து சிறை சென்றது, இடைக்கால முதல்வராக இருந்த சம்பாய் சோரான் பாஜகவில் இணைந்தது என ஜார்க்கண்ட் அரசியலில் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இப்படி இருக்கையில், தற்போது அம்மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக இறுதிக்கட்ட பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று அமித்ஷா அம்மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

அதில், ஆண்டுக்கு 5 லட்சம் வேலை வாய்ப்புகள், பொது சிவில் சட்டம் அமல், பொது சிவில் சட்டத்திலிருந்து பழங்குடி மக்களுக்கு விலக்கு, சுரங்கம் அமைக்க வெளியேற்றப்பட்ட மக்களை மீண்டும் அதே இடத்தில் குடியமர்த்த முயற்சி போன்ற வாக்குறுதிகள் பெரும் கவனம் பெற்றிருந்தன. வாக்குறுதிகளை வெளியிட்ட அதே வேகத்தில் பிரசாரத்தையும் பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இன்று இம்மாநிலத்தில் இரண்டு பகுதிகளில் நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.

அதன்படி, இன்று காலை 11 மணிக்கு பீகாரின் கயா விமான நிலையத்திற்கு வரும் மோடி, அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம் கார்வாவுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். அங்கு நடைபெறும் பேரணி பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பின்னர் அங்கிருந்து தலைநகர் ராஞ்சிக்கு வரும் அவர் சற்று ஓய்வெடுக்கிறார். பின்னர் அங்கிருந்து மதியம் 2.30 மணியளவில் சாய்பாபா பகுதிக்கு செல்கிறார். அங்கும் பேரணி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார் என அம்மாநில பாஜக தெரிவித்திருக்கிறது.

பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அம்மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மேற்கொண்டிருக்கிறார். இம்மாநிலத்தில் நவ.13 மற்றும் நவ.20 என இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இம்மாநிலத்தில் ஏற்கெனவே பாஜக பலமுறை பின்னடைவை சந்தித்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் தோல்விகளிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு வெற்றி பெறுமா? அல்லது மீண்டும் ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சிக்கு விட்டு கொடுக்குமா என்பது நவ.23ல் தெரிந்துவிடும்.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು