டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25-ந் தேதி தொடங்கக் கூடும் என கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 20-ந் தேதி வரை நடைபெறும். இக்கூட்டத் தொடரில் சர்ச்சைக்குரிய ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் அனைத்து மாநில/ யூனியன் பிரதேச சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பது வலதுசாரிகளின் கோரிக்கை. இது தொடர்பான மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் வரும் 25-ந் தேதி தொடங்கி டிசம்பர் 20-ந் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதாவை மத்திய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்யக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அதேபோல வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அத்துடன் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் வழங்க வகை செய்யும் மசோதாவும் நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடக்கப் போவது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் என்றாலும் சர்ச்சைக்குரிய மசோதாக்கள், அறிக்கைகளை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டிருப்பதால் இந்த அமர்வுகள் அனலைக் கொட்டக் கூடியதாகவே இருக்கும் என்கின்றன எதிர்க்கட்சி வட்டாரங்கள்.
அமைச்சரவை கூட்ட முடிவுகள்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகள்:
1951 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சட்ட ஆணையம்: 170 வது அறிக்கை (1999): ஐந்து ஆண்டுகளில் லோக்சபா மற்றும் அனைத்து சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்த பரிந்துரைத்தது
நாடாளுமன்றக் குழுவின் 79-வது அறிக்கை (2015): ஒரே நேரத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தது.
ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழு, அரசியல் கட்சிகள், நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் விரிவாக ஆலோசனை நடத்தியது.
நாட்டில் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கு பரவலான ஆதரவு இருப்பதாக விரிவான பின்னூட்டங்கள் காட்டுகின்றன.
செயல்படுத்துதல்:
இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவும்.
முதல் கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்.
இரண்டாம் கட்டமாக: பொதுத் தேர்தல் நடந்த 100 நாட்களுக்குள் உள்ளாட்சித் தேர்தலை (பஞ்சாயத்து மற்றும் நகராட்சிகள்) நடத்த வேண்டும்.
அனைத்து தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வேண்டும்.
நாடு முழுவதும் விரிவான விவாதங்களுக்கு வழிவகுக்கும் அல்லது செயல்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை வழங்கி இருந்தது.