ஓசூர் எல்லை அருகே 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக உலவி வருவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக தனித்தனி குழுக்களாக புறப்பட்டு சென்றுள்ளனர்.
ஹைலைட்ஸ்:
- தமிழ்நடு – கர்நாடகா எல்லை பகுதிகளில் சுற்றி திரியும் யானைகள்
- ஓசூர் கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை
- தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தல்
அதாவது, ஜவலகிரி வனச்சரகத்திற்குள் 50 யானைகள் நுழைந்துள்ளன. இவற்றில் 30 யானைகள் கூட்டமாக சென்று கொண்டிருக்கின்றன. எஞ்சிய 20 யானைகள் தேன்கனிக்கோட்டை வனச்சரகம் நோக்கி செல்கின்றன. மொத்தம் நான்கு குழுக்களாக யானைகள் செல்கின்றன.
இவை மட்டா மதிகிரி, நோகனூர், மரகட்டா, அலஹள்ளி, ஐயன்புரிதோட்டொ, தாவரக்கரை, மாலசோனை, கந்தகனபள்ளி, எனிமுச்சத்திரம், புதுக்கோட்டை, சந்தனப்பள்ளி, தலசூர், குருபட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் வலம் வருகின்றன. எனவே பொதுமக்கள் அருகிலுள்ள வனப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இரவு நேரங்களில் வீட்டிற்கு உள்ளேயே இருக்க வேண்டும்.
தேவையின்றி வெளியில் வர வேண்டாம். மனிதர்கள் – யானைகள் மோதலாக முடிய வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 60 அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வனப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர்.
இதில் வனத்துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியோர் அடங்குவர். யானைகள் கண்ணில் பட்டதுடன் அவற்றை குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கண்காணித்த வண்ணம் இருக்கின்றனர். இதற்கிடையில் வனத்துறைக்கு ஓசூர் கிராமப் பகுதியை சேர்ந்த மக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அதாவது, மனிதர்கள் வாழும் பகுதிக்குள் யானைகள் வராமல் தடுக்க வேண்டும். இதற்கு உரிய நடவடிக்கைகளை வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கிராமப் பகுதிகளுக்குள் யானைகள் நுழைவது வாடிக்கையாக இருக்கிறது. குறிப்பாக வயல்வெளிகளில் நுழைந்து பயிர்களை நாசம் செய்து விடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr