சென்னை: அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற புதிய தமிழகம் கட்சி தொண்டர்களை கைது செய்ததை எதிர்த்து, கொட்டும் மழையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டார் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி. அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 70க்கும் மேற்பட்ட சாதிகள் அடங்கிய பட்டியல் பிரிவினருக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பட்டியல் பிரிவில் மிகப்பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும், வட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் சமூகத்திற்கும் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் 3 விழுக்காடு இடஒதுக்கீடு அருந்ததியர்களுக்கு வழங்கப்படுவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டி வருகிறார்.
அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியினர் இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல முடிவு செய்திருந்தனர். காவல்துறையும் இந்த போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அனுமதித்த நேரத்தில் போராட்டம் நடத்தவில்லை என்று கூறிய காவல்துறையினர், டாக்டர் கிருஷ்ணசாமி உள்பட அவரது கட்சியினரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த நிலையில், திடீரென டாக்டர் கிருஷ்ணசாமி சாலையில் படுத்து போராட்டம் நடத்தினார். கொட்டும் மழைக்கு மத்தியில் கிருஷ்ணசாமி, சாலையில் படுத்து தர்ணா செய்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பேரணிக்கு அனுமதி வழங்கிவிட்டு, ஆயிரக்கணக்கானோர் வந்த பிறகு அனுமதி மறுப்பது என்ன நியாயம்?” என்று கிருஷ்ணசாமி போலீசாரிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். அவரது கட்சியினருடன் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கிருஷ்ணசாமி உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr