சென்னை: தமிழகத்தில் மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றினை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.. கூட்டுறவுத்துறையின் இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.தமிழக அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டையே, ரேஷன் கார்டுகள் ஆகும். இந்த ரேஷன் அட்டையை வைத்து ரேஷன் கடைகளில், இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. அதனால், தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள சுமார் 7 கோடியே 2 லட்சம் பயனாளிகள் ரேஷன் வாங்கி வருகிறார்கள்.
மழைக்காலம்: தமிழகத்தில் தற்போது பண்டிகை காலம் என்பதாலும், மழைக்காலம் துவங்கிவிட்டதாலும், ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்புகள் தட்டுப்பாடின்றி இருந்துவருகின்றன. ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் கூடுதல் கோதுமை வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்து வருவதுடன், கடந்த வாரம் இது தொடர்பாக ஆய்வு கூட்டத்தையும் சக்கரபாணி நடத்தியிருந்தார்.
அப்போது “மழைக்காலம் துவங்கியுள்ளதால், தாழ்வான இடங்களில் உள்ள ரேஷன் கடைகளை, மாற்று இடங்களுக்கு விரைவாக மாற்ற வேண்டும், ரேஷன் கடை, கிடங்குகளில் உள்ள தானியங்கள் மழையில் நனையாதபடி பாதுகாக்க வேண்டும். ரேஷன் கடைகளில் உணவு தானியங்களை அதிகளவில் இருப்பு வைக்க வேண்டும்” என்று அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
உணவு பொருட்கள்: சமீபத்தில்கூட, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது, ரேஷன் கடைகளுக்கு தேவைக்கேற்ப பொருட்கள் அனுப்பி வைக்கப்பட வேண்டும், மழைக்காலம் என்பதால், நியாய விலை கடைகளில் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைப்பதையும், ரேஷன் கடைகளில் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், மீண்டும் ஒரு முக்கிய தகவலை ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டிருக்கிறார்.. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டையில் கூட்டுறவு மருந்தகம் மற்றும் அங்காடி ஆகியனவற்றை உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமை செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா். பிறகு செய்தியாளர்களிடம் அவா் சொன்னதாவது:
“தமிழக எல்லையில் அரிசி கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மொத்தம் 8,394 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதன் மூலமாக 997 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 74 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ரேஷன் கடைகள்: மழைக்காலத்தில் உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான அரிசி மூட்டைகள் மொத்தம் 3 லட்சம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 37,000 ரேஷன் கடைகளில் 2,000 கடைகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன. தாழ்வான பகுதிகளிலுள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன.
எண்ணெய், பருப்பு போன்றவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த குறைகளு நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன… கூட்டுறவுத்துறை மூலமாக மொத்தம் 1 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50,000 கோடிக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவு கடன் சங்கங்களை வங்கிகளுக்கு இணையாக மாற்றும் பணிகளையும் செய்து வருகிறோம்.
புதிய குடும்ப அட்டைகள்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு மையங்களாக மாற்ற வேண்டும் என முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தியதன்படி, அவை படிப்படியாக பல்நோக்கு மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 16.97லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 1.25 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது” என்றாா் ராதாகிருஷ்ணன்.
Author: VS NEWS DESK
pradeep blr