டெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இனத்தைச் சேர்ந்த 2 முதியவர்கள் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள், மெய்தி இனத்தவரின் வீடுகளுக்கு தீ வைத்தபோது, இருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். 6 பேர் காணாமல் போயுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.தொடர்ந்து, அவ்வப்போது இரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அண்மையில், ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
தொடர்ந்து, ஜிரிபம் பகுதியில் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து வருகின்றனர். ஜிரிபாம் மாவட்டத்தில் நேற்று பாதுகாப்புப் படையினர் – ஆயுதக் குழுவினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு சி.ஆர்.பி.எஃப் படை முகாம் மீது ஆயுதக் குழுவினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 2 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதியவர்கள் இருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குகி இனத்தைச் சேர்ந்தவர்கள், வீடுகளை தீயிட்டு எரிக்கும்போது 2 முதியவர்கள் உயிருடன் எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், காணாமல் போன 6 பேரை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. இதில் 3 பெண்கள், 3 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் மணிப்பூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Author: VS NEWS DESK
pradeep blr