சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது.. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அழகான ஒரு வார்த்தையை சொன்னார்.. ஒத்தக் கருத்துடை கட்சிகள் எல்லாரும் ஒன்றாக இணைய வேண்டும் எனறு சொன்னார்.. ஒத்த கருத்து என்றால் என்ன.. எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் இன்றைக்கு ஒத்த கருத்து என்றால்.. மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. இந்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒத்துப்போய் வந்தால் நல்லது என்பது தான் என்னுடைய கருத்து என தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் போதை பொருள் விற்பனையை தடுக்க இந்த அரசால் முடியவில்லை… அதை ஒத்துக்கொண்டு முதலமைச்சர் தற்போது விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டிருக்கிறார். ஸ்டாலினுக்கு மக்கள் குறித்து கவலை இல்லை. குடும்ப உறுப்பினர்கள் குறித்து தான் கவலைப்படுகிறார். எனக்கு திறமை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளராக இருந்த இந்த எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் ஆனதற்கு திறமை தான் காரணம். ஆனால், ஸ்டாலின் கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான் முதலமைச்சர் ஆனார். கருணாநிதியின் பேரன் என்கிற காரணத்தால் தான் உதயநிதி துணை முதல்வராக்கப்பட்டுள்ளார் என்றார்.
அ.தி.மு.க ஆட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு வழங்கப்படுமா என்று கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, இது கற்பனையான கேள்வி. இன்னும் கூட்டணியே அமைக்கவில்லை. அப்படி இருக்கையில் கற்பனையான கேள்விக்கு பதில் கூற முடியாது என்றார்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு ஆகும். யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் ஆவர். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்வோம். அதற்கு முன்பு எது கூறினாலும் அது இன்றைய சூழலில் நிற்காது.
திமுக ஆட்சியை அதன் கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதாக தான் மக்கள் நினைப்பார்கள். கூட்டணி உடையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது. தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறுவதே அந்த கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தான். அதனால்தான் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. பாஜக இல்லாத கூட்டணிக்கு அதிமுக தயாரா என்றும் கேட்கிறீர்கள். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம்” என்றார்.
இதனிடையே இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் எடப்பாடி பழனிசாமி கூறிய ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி என்ற பேச்சு குறித்தும், பாஜக அதிமுக மீண்டும் கூட்டணியா என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதில் அளித்து தமிழிசை சௌந்திரராஜன் பேசுகையில், “2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருக்கிறது.. அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அழகான ஒரு வார்த்தையை சொன்னார்.. ஒத்தக் கருத்துடைய கட்சிகள் எல்லாரும் ஒன்றாக இணைய வேண்டும் எனறு சொன்னார்.. ஒத்த கருத்து என்றால் என்ன.. எதிர்க்கட்சிகளுக்கு எல்லாம் இன்றைக்கு ஒத்த கருத்து என்றால்.. மக்கள் விரோத திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அகற்றப்பட வேண்டும்.. இதுதான் ஒற்றை கருத்து. ஆனால் இந்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒத்துப்போய் வந்தால் நல்லது என்பது தான் என்னுடைய கருத்து. அதை முடிவு செய்ய வேண்டியது அகில பாரத மேலிட தலைமை தான்..
எடப்பாடி அண்ணனே இன்னும் காலஅவகாசம் இருக்கிறது என்பதையே கூறினார்.. ஆனால் எதற்கு அண்ணன் ஜெயக்குமார் போன்றவர்கள் முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை.. காலஅவகாசம் இருக்கிறது.. பாஜக கூட்டணியில் பல பேர் வந்து சேரலாம். பாஜக உடன் சேர்ந்து பல கட்சிகள் கூட்டணி அமைக்கலாம். திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் விலகி வரலாம்… அவர்கள் எதிர் கூட்டணியில் சேரலாம்.. அதனால் 2026 சட்டசபை தேர்தலுக்கு காலஅவகாசம் இருக்கும் போது, திராவிட முன்னேற்ற கழகமே எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது” இவ்வாறு கூறினார்.
Author: VS NEWS DESK
pradeep blr