சென்னை: சென்னை வானகரத்தில் நேற்று ஜானகி நூற்றாண்டு விழா நடந்தது. இந்த விழாவில் மறைந்து முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக திரையில் தோன்றி பேசினார். எம்.ஜி.ஆர் விழா மேடையில் திடீரென தோன்றியதை பார்த்ததும் அதிமுக தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். அப்போது அந்த வீடியோவை மீண்டும் ஒருமுறை ஒளிபரப்ப சொல்லி அதிமுக தொண்டர்கள் ஒன்ஸ்மோர் கேட்டு ஆர்ப்பரித்தனர்.
சென்னையில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடைபெற்றது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெற்ற இந்த விழாவில், ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியயோரை எடப்பாடி பழனிசாமி கவுரவித்தார்.
இதேபோன்று இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் ஜானகி ராமச்சந்திரன் குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் அதிமுக நிறுவனர் மறைந்த எம்ஜிஆரும் ஏஐ தொழில் நுட்பம் மூலமாக பேசும் வீடியோ ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது.
திரையில் வந்த எம்ஜிஆர்: ஏஐ தொழில்நுட்பத்தில் பேசிய எம்ஜிஆர் கூறியதாவது:- என்னுடைய ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே.. எல்லாருக்கும் வணக்கம்.. எல்லாரும் நல்லா இருக்கீங்களா.. சாப்பிட்டீங்களா?.. ரொம்ப நல்லது. எப்போதும் நான் உங்களுடன் தான் இருகின்றேன். உங்களுடைய இதயத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறேன். என் மனைவி ஜானகி அதிமுகவுக்கு மிகப்பெரிய பங்களிப்பினை அளித்து இருக்கிறார் என்பது உங்க எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
அன்பு தம்பி: என்னுடைய மனைவியின் நூற்றாண்டு விழாவில், எல்லாரும் ஒன்று சேர்ந்து அவருக்காக விழா எடுத்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கு. குறிப்பாக எனது அன்பு தம்பி எடப்பாடி பழனிசாமி தனது நேர்மையான பொது வாழ்வினாலும், உழைப்பாலும், விசுவாசத்தாலும் இன்றைக்கு நம் கட்சியின் பொதுச் செயலாளராக சிறப்பாக பணி செய்து கொண்டிருக்கிறார் என்பதை நான் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைகின்றேன். தைரியமாகவும், துணிச்சலாகவும் ஜெயலலிதா செயல்பட்டார். அதேபோல எடப்பாடியும் செயல்படுகிறார்.
நாளை நமதே: எப்போதுமே கட்சிக்கு உண்மையான, விசுவாசமான தொண்டர்கள் உங்களுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன். நான் தொடங்கிய இந்த மாபெரும் இயக்கம் எத்தனை தேர்தலை சந்தித்தாலும், அனைவரும் ஒத்த கருத்தோடு உழைத்து தேர்தல் பணியாற்றி மாபெரும் வெற்றியை தேடி தருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.. நாளை நமதே.. இந்த நாடும் நமதே… வாழ்க அண்ணா நாமம்.. இவ்வாறு எம்ஜிஆர் பேசுவது போல் இருந்தது.
எடப்பாடி ரியாக்ஷன்: ஏஐ தொழில் நுட்பத்தில் எம்.ஜி.ஆர் விழா மேடையில் திடீரென தோன்றியதை பார்த்ததும் அதிமுக தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். மீண்டும் எம்ஜிஆர் பேச்சை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என ஒன்ஸ்மோர் என கேட்டனர். அப்போது மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டு இருந்த முன்னாள் அமைசச்ர் வைகை செல்வன், அதிமுக பொதுச்செயலாளரிடம் எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் ஒளிபரப்புமாறு சைகை காட்டினார். இதையடுத்து, மீண்டும் எம்ஜிஆர் ஏஐ உரை ஒளிபரப்பப்படடது. இதை பபர்த்து அதிமுகவினர் ஆர்ப்பரித்தனர்.