சென்னை: நடிகர் ரஜினிகாந்தை தமிழ்நாட்டு அரசியலில் பாமகவை விட மிக அதிகமாகவே விமர்சித்தது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அவரது கட்சி நிர்வாகிகளும்தான். மராத்தியன், கூத்தாடி, புஸ்வானம் என்பது தொடங்கி அதீதமான கொச்சை வார்த்தைகளை பொதுமேடையிலேயே பெரு நெருப்பை போல கொட்டியவர்கள் நாம் தமிழர் கட்சியினர். ஆனால் இன்று நடிகர் விஜய் அரசியல் வருகையை எதிர்கொள்ள முடியாமல் வேறுவழியே இல்லாமல் விஜய்க்கு எதிரான நடிகர் ரஜினிகாந்திடம் போய் சரணாகதி அடைந்துவிட்டார் சீமான் என்பது அவரது அரசியல் பயணத்தின் அடுத்த பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.
2017-ம் ஆண்டு…. ரஜினி அரசியலுக்கு வரக்கூடும் என பேசப்பட்ட போது சீமான் இப்படித்தான் சொல்லி இருந்தார்… ” தீபாவளிக்கு வைக்கும் பெரிய வெடி வெடிக்காமல் போவது போல் ரஜினியும் புஷ்வாணமாகி விடுவார்.. தமிழகத்தை ஆளவேண்டும் என்று ரஜினிகாந்த் நினைக்கக்கூடாது” – இதுதான் ரஜினிகாந்த் குறித்த சீமானின் மிக மென்மையான விமர்சனம்.
2018-ம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர்; தமிழகமே பிரளயமாகிக் கிடந்த தருணத்தில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டனர் என உளறியிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்த சீமான், அயோக்கியத்தனம், பைத்தியக்காரத்தனம்.. விஷமத்தனம் என்பது உள்ளிட்ட அமில வார்த்தைகளுடன் மிக நீண்ட அறிக்கை வெளியிட்டதுடன் ஒவ்வொரு பொதுக் கூட்டத்திலும் பேட்டியிலும் ரஜினிகாந்தை வெளுத்தெடுத்திருந்தார் சீமான்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகனோ, சீமான் முன்வரிசையில் அமர்ந்திருக்க பச்சைத் தமிழனா ரஜினிகாந்த் என பேசத் தொடங்கி பேசக் கூடாத கொச்சைவார்த்தைகளை ரஜினிகாந்தின் தாயார், பாட்டி என அத்தனை பேரையும் இணைத்து இழிவுபடுத்தினார்.
இப்படி ரஜினிகாந்தை திரும்பிய பக்கமெல்லாம் “கொடூரமாகவே” கடித்து குதறியதுதான் சீமான் கூட்டம்… இன்று திடீரென ரஜினிகாந்திடம் போய் சரணாகதி அடைந்துவிட்டு அதனை நியாயப்படுத்துகிறது சீமான் கோஷ்டி.
15 ஆண்டுகளாக தனித்து போட்டியிடுகிறோம்..இதோ 8% ஓட்டு வாங்கிட்டோம்.. இப்படியே தனித்தே போய் கோட்டையையே பிடித்துவிடுவோம் என்றெல்லாம் பம்மாத்தும் உதாருமாக விட்டுக் கொண்டிருக்கும் சீமான் கூட்டம், கட்சி தொடங்கி ஒரே ஒரு மாநாடு நடத்தி இருக்கும் நடிகர் விஜய்யை கண்டு கதறி அழுவதை ஒவ்வொரு சீமானின் பிரஸ்மீட்டும் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக் கொண்டுதான் கொண்டேதான் இருக்கிறது. நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியால் சீமானின் வாக்குகள் சின்னாபின்னமாகும்; அவரது சோலோ ஆட்டத்தின் சோலி முடிந்துவிடும் என்கிற அச்சம் அப்பட்டமாகவே தெரிகிறது.
இதன் உச்சமாகத்தான் நேற்று வரை இழிசொல்லால் காறி உமிழ்ந்து கொண்டிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், ரஜினிகாந்திடம் சரணடைந்துள்ளார்; வேட்டையன் விமர்சனம், பிறந்த நாள் சந்திப்பு என்கிற சால்சால்ப்பு வியாக்கியானங்கள் எல்லாம் காதை ரணமாக்குகின்றன. ரஜினிகாந்தை சீமான் சந்திக்க ஒற்றை காரணமே, விஜய் அரசியல் வருகை தந்த அடி தாங்க முடியாததுதான் என்பது யதார்த்தமானது; அரசியல் ‘அ’ ‘ஆ’ அறிந்த அனைவருக்கும் புரிந்த ஒன்றுதான். சோற்றில் பூசணிக்காயை மறைப்பது போல மறைத்துவிட்டு தப்பி ஓடுகிறதாம் நாம் தமிழர் கோஷ்டி.
ரஜினிகாந்தை சீமான் சந்திக்க ஏற்பாடு செய்தது நானே என்கிற ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ரவீந்தரன் துரைசாமி. சீமான் -ரஜினி சந்திப்பு படங்களில் உடனிருந்தவரும் ரவீந்தரன் துரைசாமி. ஆனால் ரஜினியுடனான சீமானின் சந்திப்பு குறித்து ரவீந்தரன் துரைசாமி சொல்வதை விமர்சிக்கிறது நாம் தமிழர் கூட்டம். இதெல்லாம் சகிக்க முடியாத சேட்டைத்தனங்கள்தான். சீமானே சொல்கிறார்… சங்கி என்றால் தோழன் என.. அதாவது இந்துத்துவா பரிவாரங்களுக்கு இணக்கமானவராக இந்துத்துவா கூட்டத்துக்கு பல்லக்கு தூக்கியாகக் காட்டிக் கொள்கிறார் சீமான்.
சீமானின் ‘நாம் தமிழர் கட்சி’ எப்படி கிடைத்தது? சீமானின் ‘நாம் தமிழர் கட்சி ஆவணம் தயாரித்தது யார்’? சீமானின் அரசியல் நிலைப்பாடுகள் யாருக்கு ‘மட்டுமே’ எதிரானது; சீமானின் ஆவேசம் ‘யாருக்கு மட்டுமே’ எதிரானது? என்பது எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் அதுவும் அரசியலை நன்கு அறிந்த தமிழ்நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. சிலரை சில நாள் ஏமாற்றலாம்.. எல்லா தேர்தலிலும் ஏமாற்றிக் கொண்டே இருந்துவிட முடியாது.
தமிழக அரசியல் களத்தில் சீமானை விட மிக ஆவேசமாக, தர்க்கமாக, ஆணித்தரமாக, வரலாற்று நிகழ்வுகளுடன், புள்ளி விவரங்களுடன் அடுக்கு மொழியில் ‘விடிய விடிய’ வசீகரமாக பேசிய ‘ கட்சித் தலைவர்கள்’ இன்னமும் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.. கள யதார்த்தம் என்ன என்பதை புரிந்து கொண்டு.. சீமான் இன்று கைப்பற்றி வைத்திருக்கும் புலிக்கொடி தொடங்கி அத்தனைக்கும் முன்னத்தி ஏர்கள் அவர்கள்தான்.. தமிழ்நாட்டு மக்கள் அரசியலில் தங்களுக்கு தந்த இடம் எது என்பது அவர்களுக்கு தெள்ளத் தெரிவாக புரிந்ததால் பாதையை தெளிவாக வரையறைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள்.. சீமானோ மக்களை மடைமாற்றி .. மடைமாற்றி.. சமாளிக்கலாம் என நினைத்துக் கொண்டு பயணிக்கிறார்.. இந்த இரட்டை வேட கபட பயணம் கரைசேரவே போவது இல்லை என்பதை காலம் கடந்தேனும் சீமான் உணரட்டும்!
Author: VS NEWS DESK
pradeep blr