சென்னை: ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ரூ. 6,000 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் துணிச்சலான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே சந்தா (ஓஎன்ஓஎஸ்) முன்முயற்சிக்காக நமது தொலைநோக்குப் பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி. ரூ. 6,000 கோடி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் இந்தத் துணிச்சலான நடவடிக்கை, 6,300 -க்கும் மேற்பட்ட அரசு உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் ஆராய்ச்சி மற்று மேம்பாடு நிறுவனங்களில் 2, 3 அடுக்கு நகரங்களில் உள்ளவர்கள் உள்ளிட்ட 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் உலகளாவிய ஆராய்ச்சிக்கான தடையற்ற அணுகலை வழங்கும். ஆய்வுத் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் புதுமைகளை வளர்த்தெடுப்பதன் மூலம், தன்னிறைவு மற்றும் ஒருங்கிணைந்த இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சித் துறையில் வேரூன்றச் செய்வதை நோக்கிய 2047 – இல் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நமது தேசப் பயணத்தை துரிதப்படுத்துவதில் ஓஎன்ஓஎஸ் முக்கிய படியாகும்.
இந்த முன்முயற்சி இளம் ஆராய்ச்சியாளர்களின் விருப்பங்களை மேம்படுத்துவதுடன் முக்கியமான அறிவுசார் இடைவெளிகளைக் குறைத்து உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு சுற்றுச்சூழல் அமைப்பை வளர்க்கும். அனைத்து துறைகளில் ஒத்துழைப்பை வளர்ப்பதன் மூலமும், தொழில்முனைவுத் திறனை மேம்படுத்துவதன் மூலமும் ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, தொழில்முனைவு ஆகியவற்றில் இந்தியாவை உலகளாவிய தலைவராக உருப்பெறச் செய்ய ஓஎன்ஓஎஸ் உதவும். இவ்வாறு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதலின் படி, புதிய மத்திய துறைத் திட்டமாக, 2025, 2026 மற்றும் 2027 ஆகிய 3 ஆண்டுகளுக்கு, ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்காக மொத்தம் சுமார் 6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே சந்தா என்பது, இந்திய இளைஞர்களுக்குத் தரமான உயர்கல்வி கிடைப்பதை அதிகபட்சமாக்குவதற்காக, கல்வித் துறையில் கடந்த பத்தாண்டுகளில் இந்திய அரசு மேற்கொண்ட பல்வேறு முன்முயற்சிகளை மேலும் விரிவுபடுத்தும். இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கும், அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் முழுவதும் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் முன்முயற்சிக்குத் துணைபுரியும்.
ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்தின் பலன்கள், மத்திய அல்லது மாநில அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், மத்திய அரசின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) தன்னாட்சி பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான தன்னாட்சி மையமான தகவல் மற்றும் நூலக இணைப்பு என்ற மத்திய நிறுவனத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சந்தா மூலம் வழங்கப்படும். இந்த பட்டியலில் 6,300 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் கிட்டத்தட்ட 1.8 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், ஒரே நாடு ஒரே சந்தாவின் பலன்களைப் பெற முடியும்.
Author: VS NEWS DESK
pradeep blr