கோவை: கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற உறுப்பினரான காங்கிரஸ் கட்சி நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி , ஒண்டிப்புதூர் அருகே நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் இருந்து புதன்கிழமை இரவு தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இரு காவல் நிலைய எல்லையில் நடைபெற்றதால் இந்த வழக்கை யார் விசாரிப்பது என்று காவல் துறையினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 62 வயதான இவர் கோவை மாநகராட்சி 56 வது வார்டு மாமன்ற கவுன்சிலராக செயல்பட்டு வந்தார். தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் சூலூர் பட்டணம் நொய்யல் ஆற்றின் அருகே வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு அவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கவுன்சிலர் கிருஷ்ணமீர்த்திஇயற்கை உபாதையை கழிப்பதற்காக நொய்யல் பாலம் அருகே தனது வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றதாகவும், பாலத்தில் இருந்து இறங்கி பாலத்தின் முனையில் உள்ள ஆற்றங்கரை அருகே சென்றபோது இருட்டாக இருந்ததால் அங்கு கொட்டப்பட்டிருந்த உணவு கழிவுகளை மிதித்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்றும்,
அப்போது ஆற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து தற்போது அதிகமாக இல்லாததால், அவரது உடல் அங்கேயே இருந்துள்ளது. சூலூர் மற்றும் சிங்காநல்லூர் என இரு காவல் நிலைய எல்லையில் கிருஷ்ணமூர்த்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது. எனினும் சூலூர் போலீஸார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நொய்யல் பாலத்தின் அருகே தனது காரை நிறுத்திவிட்டு ஆற்றங்கரையில் நடந்து சென்றபோது, கால் வழுக்கி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததாக சூலூர் போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி மது அருந்தியிருந்ததாகவும், இச்சம்பவம் நடந்தபோது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் இரு காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ளதால் வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், இந்த வழக்கினை சிங்காநல்லூர் போலீஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சூலூர் போலீசார் தெரிவித்துள்ளனர். முன்னதாக கிருஷ்ணமூர்த்தியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளான மயூரா ஜெயகுமார் மற்றும் செல்வம் ஆகியோரின் இரு குழுக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் காது கூசும் அளவிற்கு கெட்டவார்த்தையால் திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Author: VS NEWS DESK
pradeep blr