லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்தவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவ அமைப்புகள் குற்றம்சாட்டியிருந்தன. இது குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்ட நிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது வெடித்த கலவரத்தில் 4 பேர் வரை உயிரிழந்தனர். இப்படி இருக்கையில் கலவரத்திற்கு காரணமாக மாவட்ட நீதிமன்றத்தின் ஆய்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தொடுக்கப்பட்டிருக்கிறது. இம்மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
இஸ்லாமிய மத வழித்தடங்கள் இருக்கும் பகுதிகளை குறி வைத்து, இந்துத்துவா கும்பல்கள் வன்முறை செயல்களை திட்டமிட்டு செய்வதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. பாபர் மசூதி தொடங்கி, ஞானவாபி மசூதி என பல முக்கிய இஸ்லாமிய தளங்கள், இந்து கோயில்களை இடித்துவிட்டு கட்டியதாக பிரச்சனைகள் எழுப்பப்பட்டு, பின்னர் அந்த மசூதிகளை ஆய்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடுகின்றனர். அதன் பின்னர் மசூதி இருக்கும் இடம், இந்து மத வழிப்பாட்டு தலம் இருந்த இடம்தான் என்று பஞ்சாயத்து செய்கின்றனர் என்று இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரிகள் விமர்சித்து வருகின்றன.
இப்படி இருக்கையில், தற்போது இந்த பிரச்சனை உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜமா மசூதி வரை நீடித்திருக்கிறது. இந்த மசூதி கட்டப்பட்ட காலம் குறித்து தொல்லியல் துறையிடம் போதிய தகவல்கள் இல்லை. சிலர் பாபர் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள், ஆனால், மசூதியின் கட்டுமான அமைப்பு அதை விட பழமையானதாக இருப்பதாக சொல்கிறது. இப்படி இருக்கையில்தான் இந்த மசூதி இருக்கும் இடத்தில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கியின் கோயில் இருந்தது என்று இந்துத்துவா அமைப்புகள் கூறி வந்தன.
இதே கோரிக்கையை முன்வைத்து சம்பல் நீதிமன்றத்தையும் நாடிய அவர்கள், மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கேட்டிருந்தனர். வழக்கை கடந்த 19ம் தேதி விசாரித்த நீதிமன்றம், அதே தினத்தில் ஆய்வுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. அன்று ஆய்வு நடத்தப்பட்ட போதிலும் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி 24ம் தேதி மீண்டும் மற்றொரு ஆய்வு நடத்தப்பட்டது. இங்குதான் பிரச்சனை வெடித்தது.
ஏற்கெனவே ஆய்வை முடித்துவிட்ட நீங்கள், ஏன் மீண்டும் மசூதியில் ஆய்வை மேற்கொள்கிறீர்கள்? என உள்ளூர் மக்கள் கொந்தளித்தனர். இந்த கொந்தளிப்பு போராட்டமாக வெடித்தது. போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் கலவரத்தை தூண்டியது. கலவரத்தில் போராட்டக்காரர்கள் கல்லெறிந்துள்ளனர். பதிலுக்கு காவல்துறை தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 4 பேர் வரை உயிரிழந்ததுள்ளதாக தெரிய வந்திருக்கிறது.
இந்த கலவரத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தன. இவ்வளவு பெரிய கலவரத்திற்கு காரணம் மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வுதான் என்றும், இந்த ஆய்வு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.
Author: VS NEWS DESK
pradeep blr