Search
Close this search box.

வாடகைதாரர்களுக்கு வரி.. கடை வியாபாரிகளுக்கு பாதிப்பில்லை.. திமுகவுக்கு இதே வேலை.. கிளம்பி வந்த பாஜக

சென்னை: வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக விளக்கமளித்துள்ளது.. அத்துடன் இது குறித்து மாநில அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து உருவாக்கிய ஜிஎஸ்டி கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கடந்த மாதம் 10-ந் தேதி முதல், வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறு வணிகர்கள், வருடத்துக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை வியாபாரம் செய்யும் வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல் மற்றும் வரி விலக்கு உள்ள பொருள்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.. இந்த தீர்மானத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. இதற்கு நாடு முழுவதிலும் உள்ள வணிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தீர்மானம் ரத்து: இதனிடையே, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம் மற்றும் மதுரை அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், இந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரியும், இன்று வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் மதுரையில் வணிகர்கள் முழுநேர கடையடைப்பு நடத்தி வருகிறார்கள்.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள்அனைவரும் அந்தந்த மாவட்டங்களில் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.. அத்துடன், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வணிகர் சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல, மதுரையில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் அறிவித்திருக்கிறது.

தமிழக பாஜக: இப்படிப்பட்ட சூழலில், வணிக பயன்பாட்டு வாடகைக்கான வரி விதிப்பில் வியாபாரிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று தமிழக பாஜக விளக்கமளித்துள்ளது.. இது தொடர்பாக தமிழக பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களிடம் பேசும்போது சொன்னதாவது:

“வருமான உச்ச வரம்பு ரூ.10 லட்சம் உடையவர்கள் வணிக பயன்பாட்டுக்கு கட்டடங்களை வாடகைக்கு வழங்கியிருந்தால் 15 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்று ஏற்கெனவே விதி இருந்தது. இதுவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு வருமான உச்ச வரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

வாடகைதாரர்கள்: இந்த உச்சவரம்புக்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் வாடகையில் வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அவர்களின் வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்துபவராக இருந்தால், அவர்களிடமிருந்து வரி தொகையை வசூலித்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட வாடகை தாரர்களும் ஜிஎஸ்டியின் உள்ளீட்டு வரிச்சலுகை மூலம் வாடகை வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

அப்படி வாடகைதாரர்கள் ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் உரிமையாளர்களே வாடகைக்கான வரியை செலுத்த வேண்டும். அந்தத் தொகையை கட்டட பராமரிப்புக்காக ஏதேனும் செலவு செய்திருந்தால் (ஆர்சிஎம்), வரி செலுத்தும் தொகையில் சமன் செய்து கொள்ளலாம்… இப்படி வாடகை மூலம் அதிக வருவாய் ஈட்டுவோருக்கு மட்டுமே வரி விதிக்கப்படுகிறது.. இதனால் வாடகை தாரர்களான வணிகர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது..

விளக்கம் வேண்டும்: ஆனால், இதனை தெளிவுப்படுத்த திமுக அரசு மறுக்கிறது. மத்திய அரசு மீது பழிபோடும் மலிவான அரசியலை செய்கிறார்கள்.. எனவே, இது தொடர்பாக மாநில வணிக வரித்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும் என்று நாராயணன் திருப்பதி கேட்டுக் கொண்டுள்ளார்.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr