டெல்லி ஜாமியா மசூதி : ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்கா இந்து கோவில் என்றும் இதில் இந்துக் கோவிலின் தெய்வ சிலைகள் இருப்பதாகவும், இது கடந்த காலங்களில் சிவன் கோவிலாக திகழ்ந்தது என்றும் சர்ச்சைகள் எழுந்தன. இது நாடு முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தர்கா நிர்வாகிகள் பதிலளித்து இருந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மசூதியான ஜாமியா மசூதியில் இந்துக் கோவிலில் எச்சங்கள் உள்ளன. இதனை ஆய்வுக்கு உட்பபடுத்த வேண்டும் என தொல்லியல் துறைக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சேனா கடிதம்
உலக புகழ்பெற்ற டெல்லி ஜாமியா மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என இந்து சேனா தேசியத் தலைவர் விஷ்ணு குப்தா இந்திய தொல்லியல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “வரலாற்று சிறப்பு மிக்க ஜாமியா மசூதி, இந்து கோவிலின் மீது கட்டப்பட்டது. முகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் இந்து ஆலயம் இடிக்கப்பட்டு அதன் மீது மசூதி கட்டப்பட்டது.
இந்து தெய்வ சிலைகள்
இந்த மசூதியில் இந்து ஆலயத்தின் எச்சங்கள் இன்றளவும் காணப்படுகின்றன. மசூதியின் கட்டுமானத்தின் அடியில் இந்து தெய்வ சிலைகள் மற்றும் எச்சங்கள் இருக்கின்றன.
இதனை பல்வேறு அறிஞர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்பட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் எழுதப்பட்ட விவகாரத்தை தொல்லியல் துறை மறுத்துள்ளது. தற்போது வரை அப்படியொரு கடிதம் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என தொல்லியல் துறை செய்தித் தொடர்பாளர் நந்தினி பட்டார்சார்யா சாகு தெரிவித்துள்ளார்.
தொடரும் மசூதி ஆய்வு சர்ச்சை
இந்துக் கோவிலை இடித்து கட்டப்பட்ட கட்டுமானம் என்ற சர்ச்சை உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் மசூதியில் முதலில் எழுந்தது. இந்த மசூதி 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இதற்கிடையில் மசூதி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பண்டைக் காலத்தில் இருந்த கோவிலை மீட்டெடுக்க வேண்டும்.
இது தொடர்பாக தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டு உண்மையை வெளிக்கொணர வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அதிகாரிகள் தொல்லியல் துறை ஆய்வுக்கு சென்ற போது அங்கு வன்முறை வெத்தது.
இந்த வன்முறை சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். இந்த விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஒருவர் மற்றும் உள்ளூர் எம்.எல்.ஏ மகன் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆஜ்மீர் தர்கா சர்ச்சை
இதேபோல் சர்ச்சை அஜ்மீர் தர்காவிலும் வெடித்தது. இந்த தர்கா கடந்த காலத்தில் சிவன் கோவிலாக இருந்தது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது நாடு முழுக்க சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இது போன்ற மனுக்களை நீதிமன்றம் அனுமதிக்கக கூடாது. சுதந்திர இந்தியாவில் வழிபாட்டு தலங்கள் மீதான சட்டத்தை அமல்பெற செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. மேலும், இது தொடர்பாக தர்கா நிர்வாகிகளும் விளக்கம் அளித்துள்ளனர்.
ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்
இதற்கிடையில், சம்பல் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி நேற்று (டிச.4, 2024) தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு டிச.10 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பலில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய காவல்துறை உயர் அதிகாரி, தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றும் அமைதியான முறையில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினார்கள் என்றும் கூறினார். மேலும், வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் பணியும் நடந்துவருகிறது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.