சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க தமிழ்நாடு அரசு, போக்குவரத்து காவல்துறை ஆகியவை தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கேற பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகளும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய சாலை ஒன்றில் பாலம் கட்டும் பணிக்காக போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சமூக வலைத்தளப்பக்கம் மூலம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை கோட்டூர்புரம் பகுதியில் உள்ள மத்திய கைலாஷ் சந்திப்பில் தொடங்கும் ஓஎம்ஆர் சாலையில் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கைலாஷ் சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் சோதனை ஓட்டம் அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி அடையாறில் இருந்து கிண்டி நோக்கி வரும் வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பில் ஓஎம்ஆர் சாலை நோக்கி திருப்பி விடப்படும். அந்த வாகனங்கள் 400 மீட்டர் தூரம் சென்று தரமணி சிபிடி பாலிடெக்னிக் கல்லூரியின் முன்புறம் உள்ள யூ திருப்பம் சென்று மீண்டும் மத்திய கைலாஸ் நோக்கி வந்து தங்கள் இலக்கை அடையலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கிண்டியில் இருந்து அடையாறு மற்றும் ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல செல்லலாம். மேலும் ஓஎம்ஆர் சாலையில் இருந்து கிண்டி நோக்கி வரும் மாநகரப் பேருந்துகள் அனைத்தும் மத்திய கைலாஷ் கோயிலின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பாதையில் தான் பயணிகளை இறக்கிவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் போக்குவரத்து மாற்றமானது மத்திய கைலாஷ் சந்திப்பில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நேரத்தை குறைப்பதோடு சீரான போக்குவரத்தையும் ஏற்படுத்த வழிவகை செய்யும். எனவே பொதுமக்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் மாற்றங்கள்
சென்னையைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வாகனங்கள் காரணமாக பல்வேறு விதமான போக்குவரத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது விமான நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும், பரங்கிமலை முதல் விண்கோ நகர் வரையும் மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அடுத்ததாக மாதவரம் முதல் சிறுசேரி வரையிலும் , பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலும் சென்னையின் உட்பகுதியை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அது மட்டுமல்லாமல் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்டும் பணிகளும் தொடங்கியுள்ளதால் அடிக்கடி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தாலும் எதிர்காலத்தில் சிரமம் இல்லாமல் செல்ல முடியும் என்பதற்காக தமிழக அரசுக்கும் போக்குவரத்து காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Author: VS NEWS DESK
pradeep blr