Chennai Food Festival: ருசிச்சி சாப்பிடணுமா? .. களைகட்டும் சென்னை உணவு திருவிழா – என்ன ஸ்பெஷல்?

150 க்கும் மேற்பட்ட பெண்கள் சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் உடனடியாக சமைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு வகைகளும் இந்த உணவு திருவிழாவில் இடம் பெற்றுள்ளது.

Chennai Food Festival: ருசிச்சி சாப்பிடணுமா? .. களைகட்டும் சென்னை உணவு திருவிழா – என்ன ஸ்பெஷல்?

சென்னை உணவு திருவிழாImage Credit source: X

சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள உணவுத் திருவிழாவுக்கு முதல் நாளிலே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் அங்கு கடைகள் அமைத்திருந்தவர்கள் உற்சாகமடைந்தனர். தமிழ்நாடு அரசின் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இந்த உணவு திருவிழாவானதே நடைபெறுகிறது. மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்கள் அடங்கிய இந்த உணவு திருவிழா நேற்று (டிசம்பர் 20) தொடங்கியது. இதனை துணை முதலமைச்சரும், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் 24ஆம் தேதி வரை மெரினா கடற்கரையில் நடைபெறும் இந்த உணவு திருவிழா முதல் நாள் மட்டும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை செயல்பட்டது.

!இன்று (டிசம்பர் 21) முதல் 24 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவில் இடம் பெற்றுள்ள உணவுகள் குறித்தும் அவற்றின் விலை பட்டியல் குறித்தும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் அதிகபட்சமாக கரூர் நாட்டுக்கோழி பிரியாணியும், சிவகங்கை ஸ்பெஷலான நெய் சாதம் மற்றும் உப்பு மட்டன் கறியும் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. உணவு திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடாக லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய வளாகங்களில் இலவச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

என்னென்ன உணவுகள் இடம் பெற்றுள்ளது?

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த உணவுகள் அனைத்தும் தரமானதாகவும், முன்னணி ஹோட்டல்களின் உணவு தரத்திற்கு இணையானதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு திருவிழாவில் கோவை கொங்கு மட்டன் பிரியாணி, நாமக்கல் பள்ளிபாளையம் சிக்கன், தர்மபுரி ரவா கஜூர், திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், நீலகிரி ராகி களி அவரை குழம்பு, புதுக்கோட்டை சுக்குமல்லி காபி, இராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, விருதுநகர் கரண்டி ஆம்லெட், தஞ்சாவூர் பருப்பு உருண்டை குழம்பு, திருச்சி நவதானியப்பட்டு, நாகப்பட்டினம் மசாலா பணியாரம், கன்னியாகுமரி பழம்பொரி, சென்னை தயிர் பூரி, காஞ்சிபுரம் கோயில் இட்லி, மதுரை கறி தோசை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உணவுகள் இடம்பெற்றுள்ளது.

மேலும் திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, உடன்குடி கருப்பட்டி, திருவண்ணாமலை சிமிலி, நீலகிரி ஸ்ட்ராபெரி ப்ளூபெர்ரி,  தென்காசி தேன் நெல்லி, கிருஷ்ணகிரி மசாலா தட்டுவடை, கரூர் பாசிப்பருப்பு உருண்டை, காஞ்சிபுரம் முட்டை மிட்டாய், தர்மபுரி குதிரைவாலி ரோஸ் லட்டு, திண்டுக்கல் காராபூந்தி, கோவை பீட்ரூட் மால்ட் பொடி, கடலூர் சங்குப்பூ சர்பத், சென்னை வேர்க்கடலை லட்டு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்த உணவு திருவிழாவுக்கு அனுமதி இலவசம் என்பதால் இன்று மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr