Vaikunta Ekadasi 2025: வைகுண்ட ஏகாதசி திருவிழாவிற்கு செல்ல பக்தர்களுக்கு இணையத்தில் டிக்கெட்டுகள் டிசம்பர் 23ஆம் தேதி வெளியிடப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. டிக்கெட் இல்லாத பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அடுத்த ஆண்டு (2025) வைகுண்ட துவார தரிசனம் நடைபெற உள்ளது. இது ஜனவரி மாதம் 10 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வரும் நிலையில் வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி செல்வோர்க்கு வசதியாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டுகள் 9 மையங்களில் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்கான இணையதள டிக்கெட்டுகளை டிசம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி சியாமளா ராவ் மற்றும் கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு அன்னமயா பவனில் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
இணையதள டிக்கெட்கள்:
அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்த பல்வேறு முடிவுகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வைகுண்ட துவார தரிசனத்திற்கான பத்து நாள் ஸ்ரீவாணி டிக்கெட் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்த தரிசனத்திற்கான பத்து நாட்கள் சிறப்பு நுழைவு தரிசனம் டிக்கெட்டுகள் இணையத்தில் 24 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டிற்கான விலை ரூ.300 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனத்திற்கு 8 மையங்களில் திருப்பதியில் டோக்கன் வழங்கப்படும். அதேபோல் திருமலையில் ஒரு மையத்தில் எஸ்.எஸ்.டி (நேரம் மற்றும் தேதி குறிப்பிடப்பட்ட இலவச தரிசனம்) டோக்கன் நேரடியாக வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
டோக்கன் வழங்கப்படும் இடங்கள்:
இதேபோல் திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக, திருப்பதி மாநகரில் உள்ள ராமச்சந்திரா புஷ்கரணி, ஜீவகோணா ராமா நாயுடு பள்ளி, சீனிவாசம், விஷ்ணு நிவாசம் , கவுஸ்தூபம் ஓய்வு இல்லம், எம்.ஆர்.பள்ளி, இந்திரா மைதானம், பூதேவி வளாகம் ஆகிய எட்டு இடங்களில் தரிசனத்திற்கான டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கன் உள்ளவர்களுக்கே அனுமதி:
டோக்கன் உள்ள பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் டோக்கன் இல்லாத பக்தர்கள் கோயிலுக்கு வரலாம் ஆனால் சாமி தரிசனத்திற்கு வரிசையில் செல்ல முடியாது என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசநாளில் சாமி தரிசனம் காலை 4:45 தொடங்குவதால் அன்றைய தினம் கடும் நெரிசல் ஏற்படுவதன் காரணமாக கோவிலில் தேவ ஆசீர்வாதம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் அந்த நாளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்கத்தேர் வளம் வருகிறது. மேலும் வைகுண்ட துவாதசி காலில் அதிகாலை 5 30 மணி முதல் 6:30 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் நடைபெறும் என்றும் தேவஸ்தானம் அறிவிப்பில் தெரிவித்துள்ளது. கூடுதலாக கோவிந்த மாலை பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Author: VS NEWS DESK
pradeep blr