திருப்பூர் : ‘பள்ளிகளில் பெற்றோருக்கு மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது’ என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளதை, ஹிந்து முன்னணி கண்டித்துள்ளது.
‘தனியார் பள்ளியில் பெற்றோருக்கு பாத பூஜை செய்வது கூடாது. மீறி நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ‘அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம்’ என்பது தான், தமிழர்களின் அடிப்படை பண்பாடு. பெற்றோரை போற்றுதல், வணங்குதல் என்பது தமிழர் மரபிலே உள்ள நல்லொழுக்கமாகும்.
யாரெல்லாம் பெற்றோரை போற்றினரோ, அவர்கள் தங்களது வாழ்வில் வெற்றி பெற்றவர்களாக மக்களால் போற்றப்படுகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும். தனியார் பள்ளியில் பெற்றோர், மாணவர் விருப்பத்துடன் தான் பாத பூஜை நடக்கிறது. மாணவர்களை யாரும் கட்டாயப்படுத்துவது இல்லை.
இதுபோன்ற நிகழ்வுகளால், மாணவர் – பெற்றோர் உறவு மேம்படுகிறது. பெற்றோருக்கு தங்கள் குழந்தைகள் மீதான அன்பும், அக்கறையும் கூடுகிறது என்பதே உண்மை. இத்தகைய நிகழ்வுகள் தவறான செயலாக சித்தரிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. நம் பண்பாட்டை சிதைக்கும் வெளிநாட்டு கலாசாரத்தை, பள்ளிகளில் புகுத்துவதை திராவிட மாடல் ஆட்சி ஊக்கப்படுத்துகிறது.
மாணவர்களிடம் போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பள்ளிகளில் வன்முறை பெருகி வருகிறது. இதற்கு தீர்வாக பண்பாட்டு போதனை வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் வைத்த கோரிக்கையை, நடைமுறைப்படுத்த கல்வித் துறை மறுக்கிறது. தி.மு.க.,வின் அரசியல் பிரிவு போல் செயல்படுவதை, பள்ளிக்கல்வித் துறை நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Author: VS NEWS DESK
pradeep blr