தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள பதிவில், பெண்கள் குறிப்பாக கல்லூரி பயிலும் மாணவிகள் தங்களுடைய செல்போன்களில் ஆபத்து காலத்தில் உதவும் காவல் உதவி என்ற செயலியை கட்டாயம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.பொதுமக்கள் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வருவதற்கு பயப்படும் நிலைதான் உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டியில் உள்ள புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காவல்துறை உடனடியாக செயல்பட்டு ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் அருண், இந்த வழக்கில் ஞானசேகரன் மட்டும் தான் குற்றவாளி என தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது எப்படி காவல் ஆணையர் ஒருவர் மட்டுமே குற்றவாளி என கூற முடியும்?. அவ்வாறு கூறுவதால் அவருக்கு கீழ் உள்ள அதிகாரி எப்படி மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிப்பார் என சரமாரியாக கேள்வி எழுப்பியிருந்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது சட்டவிரோதம் என்றும், அதற்கு யார் பொறுப்பு என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை இன்று ஒத்தி வைத்திருந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
இதனிடையே இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியானது முற்றிலும் தொழில்நுட்ப கோளாறு தான் என்றும் காவல்துறை இதனை வெளியிடவில்லை எனவும் வாதிட்டார். ஆனால் முதல் தகவல் அறிக்கை முடக்கப்பட்ட பின் சிட்டிசன் போர்ட்டலில் இருந்து எப்படி 14 பேர் அதனை பார்த்திருக்க முடியும்? இதற்கு முன்பு எத்தனை முதல் தகவல் அறிக்கைகள் இதுபோல் வெளியாகி உள்ளது? என சரமாரியாக நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி லட்சுமி நாராயணன் அமர்வு கேள்வி எழுப்பியது.
இதனைத் தொடர்ந்து தனக்கு பின் பெரிய குழு இருப்பதாக காட்டுவதற்கு போன் பேசுவது போல் குற்றவாளி ஞானசேகரன் நடித்துள்ளார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்த நிலையில், குற்றவாளி ஞானசேகரனுடன் மற்றொருவர் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கூறப்பட்டதால் அவரின் போன் அமைப்புகள் சரிபார்த்த போது அது ஏரோபிளேன் மோடில் இருந்தது தெரியவந்ததாக கூறினார்.
ஊடகங்களுக்கு பாராட்டு
அதுமட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாப்பது காவல்துறையின் பொறுப்பு மட்டுமின்றி பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதில் சொன்ன நீதிபதிகள் அமர்வு, “ முதல் தகவல் அறிக்கை பதிவிறக்கம் செய்தவர்கள் யார் என்பதை அறிந்திய வசதி இருக்கும்போது அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினர். மேலும் ஊடகங்களால் தான் இது போன்ற சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும், அரசு அதிகாரிகள் நேர்மையுடனும் வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டுமே தவிர பத்திரிகைகள் தவறாக திரித்து வெளியிட்டு விட்டதாக கூறக்கூடாது. ஊடகங்கள் ஒன்றும் எதிரிகள் கிடையாது” என கூறினார்.
இதனையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க 3 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் காவல்துறை செய்த தவறால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கவும், கல்வியை முடிக்கும் வரை அவரிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அப்பெண், அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr