Rahul Gandhi: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை மத்திய அரசு அவமதிப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ட்விட்டரில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதேபோல், கால தாமதம் செய்ததாக கூறி மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள நிகாம் போத்காட்டில் இன்று தகனம் செய்யப்பட்டது. மறைந்த மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத் உட்பட பல தலைவர்கள் நிகாம் போத்காட் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங்கின் உடலுக்கு அவரது மூத்த மகள் இறுதி சடங்குகளை செய்தார்.
இந்தநிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் நினைவை மத்திய அரசு அவமதிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “டாக்டர்.மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிப்பதாகும். குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்ட முயற்சி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்தான் இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றினார். மேலும் பல்லாயிர கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டார். ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிக்கும் செயல். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து என்றுமே மறையாது!” என தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி விமர்சனம்:
அதேபோல், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் ட்விட்டரில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அன்னையின் சிறந்த மகனும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நிகம்போத் காட்டில் இன்று நடத்தியதன் மூலம் தற்போதைய அரசு முற்றிலும் அவமானப்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகாலம் இந்தியாவின் பிரதமராக இருந்தார். அவர் ஆட்சி காலத்தில் இந்தியா பொருளாதார வல்லரசாக மாறியது. அவருடைய கொள்கைகள் இன்னும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஆதரிக்கின்றன.
இதுவரை, அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்திற்கு மதிப்பளித்து, அவர்களின் இறுதி சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட சமாதிகளில் செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்தவித சிரமமும் இன்றி அஞ்சலி செலுத்தினர். டாக்டர். மன்மோகன் சிங் நமது உயரிய மரியாதைக்கும், அடக்கத்திற்கும் உரியவர். நாட்டின் இந்த மகத்தான மகனுக்கும் அவரது புகழ்பெற்ற சமூகத்திற்கும் அரசாங்கம் மரியாதை காட்டியிருக்க வேண்டும்.” என தெரிவித்திருந்தார்.
தலைவர்கள் மத்திய அரசை சாடுவது ஏன்..?
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், மன்மோகன் சிங்கின் குடும்பத்தாரும் மன்மோகன் சிங்கை தகனம் செய்யும் இடத்திலேயே நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதற்கு பாஜக ஒருநாள் வரை கால அவகாசம் எடுத்து, பின் நினைவிடம் அமைக்கப்படும் என தெரிவித்தது. இதையடுத்து, கால தாமதம் செய்ததாக கூறி மத்திய அரசை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
Author: VS NEWS DESK
pradeep blr