New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு!

கடந்த சில ஆண்டுகளாகவே காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை காரணமாக விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்த நிலையில் இந்த ஆண்டும் அப்படியாக அமைய வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக உள்ளது.

New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழ்நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டம் (கோப்பு புகைப்படம்)Image Credit source: X

2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் போலீசார் இன்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். விபத்தில்லா புத்தாண்டு என்ற கொள்கையை முன்வைத்து இந்த கண்காணிப்பானது நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி மாலை வந்து விட்டாலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். குறிப்பாக மாவட்ட தலைநகரங்களில் பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட இடங்களில் கூடி ஆட்டம், பாட்டம், வாண வேடிக்கை என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இப்படியான நிலையில் சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை புத்தாண்டு கொண்டாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை மெரினா, பெசன்ட் நகர், நீலாங்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுதுபோக்கு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும். இப்படியான நிலையில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.

தீவிர கண்காணிப்பு

இந்த கூட்டத்தில் கடற்கரை மற்றும் வழிபாட்டுத் தலங்கள் ஆகிய பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு 9 மணியிலிருந்து காவல் துறையினர் தனிக்கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் முக்கிய சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலை தடுப்பதோடு கொண்டாட்டம் என்கிற பெயரில் அதிவேகமாக செல்லும் வாகனங்களையும் பந்தயத்தில் ஈடுபடுபவர்களையும் கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். இதன் மூலம் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் டிசம்பர் 31ம் தேதி மாலை முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை பொதுமக்கள் சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்டு எந்த கடற்கரையில் கடல் நீரிலும் இறங்கவோ குளிக்கவோ அனுமதி கிடையாது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்க வேண்டும். சென்னை மெரினா, சாந்தோம் பகுதியில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

போக்குவரத்து மாற்றம்

சென்னையை பொருத்தவரை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று மாலை 7 மணி முதல் நாளை காலை 6  மணி வரை போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டு அதற்கான மாற்றுப் பாதை அறிவிப்பையும் சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. கடற்கரையின் உட்புற சாலையில் வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்பட்டு அதற்கு மாற்று இடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை முதல் நாளை காலை வரை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மதுபோதையில் வாகனங்கள் இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இயக்கப்படும் வாகனங்களும் அறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மிகவும் பாதுகாப்புக்கும் மகிழ்ச்சியாகவும் புத்தாண்டை கொண்ட காவல்துறை அறிவுரைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು