இப்படி எத்தகைய பொருளாதார சூழல் இருந்தாலும் முயற்சித்தால் முன்னேற முடியும் என நிரூபித்த யாசீன் ஷான் முகமது என்றைக்கும் வரலாற்றில் நினைவுக்கூரப்படுவார். அவருக்கு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதி மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் நீதித்துறை சேவைகள் தேர்வில் உணவு டெலிவரி செய்யும் நபர் யாசீன் ஷான் முகமது வெற்றி பெற்று அசத்தியுள்ளது பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது. இவர் மாநில அளவில் 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வசிக்கும் யாசின் ஷான் முகமது மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர். வீட்டின் மோசமான பொருளாதார நிலையிலும் கூட மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் கடுமையாக உழைத்து அரசு பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாசீன் ஷான் முகமது படிக்கும்போதே தினக்கூலி, உணவு டெலிவரி செய்யும் வேலையும் பார்த்து வந்துள்ளார். அவரது போராட்டம் நிறைந்த வெற்றிக் கதை பலரும் உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
யாசினின் தாயார் 6ஆம் வகுப்போடு படிப்பை கைவிடும் சூழல் ஏற்பட்டது. அவருக்கு குடும்பத்தினர் 14 வயதில் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 19 வயதில் விவாகரத்து பெற்றாள். யாசின் பிறக்கும் போது அவரது தாயாருக்கு 15 வயதுதான் ஆகியிருந்தது. அவர் தினசரி கூலித் தொழிலாளியாகவும், பெண் சமூக சுகாதார ஆர்வலரான ஆஷா தொழிலாளியாகவும் பணிபுரிந்தார். இது அவரது குடும்பம் வாழ உதவியது. எக்காரணம் கொண்டும் கணவரிடம் எந்த உதவியும் எதிர்பார்க்காத பெண்ணாக வாழ்ந்தார்.
இப்படியான நிலையில் யாசின் வளரத் தொடங்கினார். குடும்பத்தின் மோசமான பொருளாதார நிலை காரணமாக, அவர் சிறுவயதிலிருந்தே செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்யும் பணியை மேற்கொள்ளத் தொடங்கினார். இதன் மூலம் ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் குடும்ப பாரம் என இரண்டையும் சமாளித்து வந்தார். பல சமயங்களில் தினக்கூலியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் யாசின் மனம் தளராமல் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரி சென்ற பின்பு வீட்டு அருகிலிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்க தொடங்கினார். இதனையடுத்து சட்டப்படிப்பு படிக்கும் போது Zomato நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்பவராக பணியாற்றி வந்தார்.
யாசின் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் டிப்ளமோ பிரிவு எடுத்து படித்தார். அதன்மூலம் அவருக்கு குஜராத்தில் சிறிய வேலை கிடைத்தது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய அவர் மீண்டும் கேரளா திரும்பி படிக்க தொடங்கினார்.Public administration பிரிவில் பட்டம் பெற்றார். மாநில சட்ட நுழைவுத் தேர்வில் 46வது இடம் பெற்று எர்ணாகுளத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு சட்டக் கல்லூரியில் அட்மிஷன் கிடைத்தது. சட்டப் படிப்பை முடித்த பிறகு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இளநிலை வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். அங்கு சாகுல் ஹமீது என்பவரின் உத்வேகத்தால் நீதிபதி பணிக்காக முயற்சிக்க தொடங்கினார்.
முதல் முயற்சியிலேயே முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தார். இந்நிலையில் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்று மாநில அளவில் 2ஆம் இடத்தைப் பிடித்து விரைவில் சிவில் நீதிபதியாக பதவியேற்க உள்ளார். தான் தேர்வுக்கு முயற்சிக்கும் அதேசமயம் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.