சமூக வலைத்தளம் என்பது காலத்தின் மாற்றத்தில் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதுமான தொடர்புகள் அதிகரித்துள்ள போதும் மோசடி சம்பவங்களும் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இதனால் பயனாளர்கள் மோசமான முடிவுகளையும் தேடிக் கொள்கின்றனர்.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதள கணக்கு தொடங்க பெற்றோர் அனுமதி தேவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023ன் வரைவு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இந்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், MyGov.in என்ற இணையதளம் மூலம் புதிய வரைவு விதிகளுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் இருந்தால் அதனை பிப்ரவரி 18 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் வரைவு விதிகள் குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ள தனிநபர்களின் தனிப்பட்ட தரவை சட்டப்பூர்வமான பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகளை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதன்படி தனிப்பட்ட தரவைக் கையாளும் பொறுப்பில் உள்ள சமூக வலைத்தள நிறுவனங்கள் சிறுவர்கள் அளிக்கும் தகவல்களை செயல்படுத்துவதற்கு முன் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தொடர்பான தகவல்களுக்கு பெற்றோர்கள் தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்க அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களை அல்லது டிஜிட்டல் லாக்கர்களுடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாள டோக்கன்களைப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் இதில் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்புகளுக்கு இருந்து விலக்கும் அளிக்கப்படவுள்ளது.
குழந்தைகளின் தரவுகளில் கவனம் செலுத்துவதோடு வரைவு விதிகள் மேம்படுத்தப்பட்ட நுகர்வோர் உரிமைகளையும் முன்மொழிகின்றது.அதாவது பயனர்கள் தங்கள் தரவை நீக்கக் கோரவும் மற்றும் அவர்களின் தரவு ஏன் சேகரிக்கப்படுகிறது என்பது குறித்து நிறுவனங்களிடமிருந்து வெளிப்படையான பதிலைப் பெறவும் அனுமதிக்கிறது. மேலும் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ரூ.250 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், இது தரவு நம்பிக்கையாளர்களுக்கு வலுவான பொறுப்பை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தரவு சேகரிப்பு நடைமுறைகளை தெரிந்து கொள்வதற்கும், தரவு பயன்பாட்டிற்கான தெளிவான விளக்கங்களைக் கோருவதற்கும் நுகர்வோருக்கு உரிமை உண்டு. இந்த வரைவு விதிகள் “இ-காமர்ஸ் நிறுவனங்கள்”, “ஆன்லைன் கேமிங் இடைத்தரகர்கள்” மற்றும் “சமூக ஊடக இடைத்தரகர்கள்” உள்ளிட்ட முக்கியமான டிஜிட்டல் இடைத்தரகர்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை குறிப்பிடுகிறது. இந்த விதிகளுக்கு நிறுவனங்கள் இணங்குவதை மேற்பார்வையிட அரசு ஒரு தரவு பாதுகாப்பு வாரியத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது முழு டிஜிட்டல் ஒழுங்குமுறை அமைப்பாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த விரிவான நடவடிக்கைகள் தரவு நம்பிக்கையாளர்கள் வலுவான தொழில்நுட்ப மற்றும் நிறுவன பாதுகாப்புகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குழந்தைகள், பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் முழுவதும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்துவதும், அதில் நேரம், காலம் பார்க்காமல் செலவிட்டு வருவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இது அவர்களின் உடல்நலம், கல்வி, மனநலம், எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது என சொல்லப்படுவதால் ஒவ்வொரு நாட்டு அரசும் அதற்கான நடவடிக்கைகளில் களம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.