சர்ச்சையில் சிக்கியுள்ள அந்த பிரியாணி கடையின் கிளைகள் தமிழ்நாடு முழுவதும் முக்கியமான பெருநகரங்கள் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் சென்னையில் செயல்படும் கிளை ஒன்றில் கூட ஆர்டர் செய்யப்பட்ட சிக்கனில் புழு இருந்ததாக புகார் எழுந்ததது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்படும் பிரபல பிரியாணி கடை ஒன்றில் பூச்சி இருந்ததாக வெளியான புகாரில் திடுக்கிட வைக்கும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் ஏராளமான பிரபல உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் கோவை கிராஸ்கட் சாலை 11 வது தெருவில் அமைந்திருக்கும் பிரபல பிரியாணி கடையில் எப்போதும் கூட்டமாக காணப்படும். சாதாரண நாட்களில் கூட அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வருவதால் இந்த பகுதி எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மேலும் விடுமுறை நாட்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிக் கொண்டும், சாப்பிட்டும் சென்று வருகின்றனர். பிரியாணிக்கு பெயர் போன அந்த உணவகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. அன்று மதியம் இளம் வயதுடைய ஆணும், பெண்ணும் உணவருந்த வந்துள்ளனர். அவர்கள் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஊழியர்கள் பரபரப்பாக பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் தாங்கள் சாப்பிட்ட பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் தரப்பில் அப்படி நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என பதில் அளிக்கப்பட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் வாய் சண்டையாக மாறியுள்ளது. உடனடியாக நடந்த சம்பவங்களை எல்லாம் சாப்பிட வந்த அந்த இளம் ஜோடி தங்களுடைய செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். மேலும் உணவு அருந்தியதற்கு பணம் தர முடியாது என கூறி அங்கிருந்து சென்று விட்டனர்.
பின்னர் அந்த ஜோடி பிரியாணியில் பூச்சி இருந்ததாக கூறி வீடியோ ஒன்றை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் அந்த கடைக்கு எதிரான கருத்துகளை பதிவிட தொடங்கினர். இப்படியான நிலையில் சந்தேகம் அடைந்த உணவக நிர்வாகம் சம்பந்தப்பட்ட நாளில் கடையிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் வாக்குமாதம் செய்த இளைஞரும் அவருடன் வந்த பெண்ணும் பூச்சியை பிரியாணி தட்டில் எடுத்து போடும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் இருக்கும் நிலையில் அப்பெண் தட்டை தாங்கள் இருந்த டேபிளுக்கு அடியில் கொண்டு செல்லும் காட்சிகளும், செல்போனில் போட்டோ எடுக்கும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. பின்னர் தட்டு மேல வந்த சில நொடிகளில் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியிருந்தது. இதன் மூலம் திட்டமிட்டு தங்கள் கடை மீது அவதூறு பரப்பியிருப்பதாக காட்டூர் காவல் நிலையத்தில் அந்த இளம் ஜோடி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் இப்படி திட்டமிட்டு அவதூறு பரப்புவதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
Author: VS NEWS DESK
pradeep blr