எடப்பாடி பழனிசாமியின் உறவினர் வீடு, அலுவலகங்களில் 5வது நாளாக ஐடி ரெய்டு

ஈரோடு செட்டிபாளையம், முள்ளாம்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினரின் வீடுகள், அலுவலகங்களில் 5வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. ஈரோடு அவல்பூந்துறை பகுதியை சேர்ந்தவர் என்.ராமலிங்கம். தொழிலதிபர். இவருக்கு சொந்தமாக என்.ஆர்.கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டார்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ராமலிங்கத்தின் நிறுவனத்திற்கு அவரது மகன்கள் சூரியகாந்த், சந்திரகாந்த் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். இவர்களது கட்டுமான நிறுவனம் தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும், ஒன்றிய, மாநில அரசுகளின் சார்பில் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை செய்து வருகின்றன.

ராமலிங்கத்தின் இளைய மகன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன் ஆகியோர் பெருந்துறையை சேர்ந்த தொழிலதிபர் சுப்பிரமணி என்பவரது மகள்களை திருமணம் செய்துள்ளனர். இதன்மூலமாக ராமலிங்கமும், எடப்பாடி பழனிசாமியும் நெருங்கிய உறவினர்களாவர். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ராமலிங்கத்தின் சொத்து மதிப்பும், அவரது நிறுவனத்தின் சொத்து மதிப்புகளும் கிடுகிடுவென உயர்ந்தன. இந்நிலையில், ராமலிங்கத்தின் நிறுவனத்தில் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவல்களின்பேரில், ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் என்.ஆர். கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ராமலிங்கம் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆர். திருமண மண்டபம், ஆர்பிபி கட்டுமான நிறுவனம் ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 7ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், ராமலிங்கத்தின் நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஆர்பிபி கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் 5வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தவிர, பவானியை அடுத்துள்ள அம்மாபேட்டையில் ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிச்சாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் மரவள்ளி கிழங்கு அரவை (ஸ்டார்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இதில், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அந்த ஆவணங்களின் அடிப்படையில், ஈரோடு திண்டல், வித்யா நகரில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் உறவினரான சிவாஜி அண்ட் கோ எனும் பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சிவா என்பவரது வீட்டிலும் கடந்த 2 நாள்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VS NEWS DESK
Author: VS NEWS DESK

pradeep blr

ಬಿಸಿ ಬಿಸಿ ಸುದ್ದಿ

ಕ್ರಿಕೆಟ್ ಲೈವ್ ಸ್ಕೋರ್

ಚಿನ್ನ ಮತ್ತು ಬೆಳ್ಳಿ ಬೆಲೆಗಳು