தேனி: தேனியைச் சேர்ந்த தம்பதியினரின் குழந்தை செல்போனில் தவறுதலாக பதிவிறக்கப்பட்ட செயலியால் தம்பதியினரின் வங்கிக் கணக்கில் இருந்து பல தவணைகளாக 24 லட்சம் ரூபாயை எடுத்து வடமாநில மோசடி கும்பல் மோசடி செய்திருந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த அர்ஜுன் குமார் என்பவர் கூறிய தகவல், போலீசாரை ஆடிப்போக வைத்துள்ளது. அந்த கும்பல் அர்ஜூன் குமார் மற்றும் பலரது வங்கி கணக்கை எப்படி எல்லாம் பயன்படுத்தியுள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர்தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்த 42 வயதாகும் சிவனேசன் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் மற்றும் இவரின் மனைவி நகை அடகு கடை வைத்து தொழில் செய்து வருகிறார், தங்கள் தொழிலில் வரும் பணத்தை வங்கிக் கணக்கில் சேமித்து வரும் இவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை வங்கிக்குச் சென்று பண பரிவர்த்தனை குறித்து சரி பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் கடந்தாண்டு வங்கிக்கு சென்று தங்களது பண பரிவர்த்தனை குறித்து சரிபார்த்தபோது தங்களது செல்போனில் லிங்க் செய்யப்பட்டிருந்த மூன்று வங்கி கணக்கில் இருந்து 24 லட்சத்தி 69 ஆயிரத்து 600 ரூபாய் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த தம்பதி, வங்கி மேலாளரை அணுகிய போது, அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பல்வேறு வங்கி கணக்கிற்கு பல்வேறு தவணைகளாக பணம் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
பின்னர் இது குறித்து தேனி சைபர் போலீசாரிடம் சிவனேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணையை தொடங்கினார்கள். அப்போது தம்பதியினரின் போன்களை சோதித்த போது அதில் அவர்களின் குழந்தை அடிக்கடி செல்போனில் வீடியோ கேம் பதிவிறக்கம் செய்து விளையாடி வரும் நிலையில் தவறுதலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட ஒரு செயலி மூலம் அவர்கள் வங்கி கணக்கில் உள்ள விவரங்களை சேகரித்து அவர்களின் பணத்தை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடியது தெரிய வந்தது. இதனை அடுத்து பணம் சென்ற 9 வங்கிக் கணக்கு விவரங்களை கண்டறிந்து போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
அதில் ஒரு வங்கிக் கணக்கு பீகார் மாநிலம் பாட்னா பகுதியை சேர்ந்த அர்ஜுன் குமார் (22) என்பவர் பெயரில் இருந்தது தெரியவந்தது பின்னர் அவரை பிடிப்பதற்கு சைபர் கிரைம் ஆய்வாளர் வெங்கடாசலம் தலைமையில் தனிப்படை அமைத்து தேடிய போது அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரியவந்தது. அதன் பின்னர் அங்கு சென்று அவரை கைது செய்து தேனி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது அர்ஜுன் குமார் கூறும் போது, பணம் திருட்டிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் மோசடி செய்யும் கும்பல் தன்னிடம் வங்கி கணக்கு விவரங்கள், செல்போன் சிம் கார்டு ஆகியவற்றை கேட்பார்கள் அதை கொடுத்தால் தனக்கு பணம் கொடுப்பார்கள் என்றும் இதே போல் தனது நண்பர்கள் பலரும் தங்களது விவரங்கள் கொடுத்து பணத்தை பெற்றுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் கூறி அதிர வைத்துள்ளார். இதையடுத்து அர்ஜுன் குமாரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை பிடிப்பதற்காக தேனி சைபர் கிரைம் போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாகவே குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கக்கூடாது.. அப்படி கொடுப்பதாக இருந்தால் பிளே ஸ்டோர், வங்கி கணக்கு உள்பட பல்வேறு விவரங்களை லாக் செய்து தாருங்கள். ஏனெனில் விளையாட்டாக குழந்தை செய்த சிறிய தவறால் 24 லட்சத்தை பெற்றோர் இழந்துள்ளனர்.