Gold Price Crossed Rs. 65,000 | சென்னையில் இன்று (மார்ச் 14, 2025) தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ளது. ஜனவரி முதல் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்க விலை, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, மார்ச் 14 : சென்னையில் தங்கம் விலை இன்று (மார்ச் 14, 2025) வரலாறு காணாத உயர்வை சந்தித்துள்ளது. அதாவது தங்கம் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.65,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர் உயர்வை சந்தித்துக்கொண்டே செல்லும் நிலையில், அது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இன்றைய விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.65,000-த்தை கடந்து வரலாறு காணாத விலை உயர்வை அடைந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார சூழலுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை குறைவது, உயருவது இயல்பான ஒன்றுதான். ஆனால், கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது. குறிப்பாக 2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரசரவென உயர்ந்து வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்கும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை கடகடவென உயர்ந்து வருகிறது. அதன்படி, இன்று தங்கம் விலை சவரன் ரூ.65,000-த்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று மாதங்களிலேயே அபார உயர்வை சந்தித்த தங்கம் விலை
2025 ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.61,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. அது, 2025, பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 2025, பிப்ரவரி 11 ஆம் தேதி ரூ.64,480-க்கும் 2025, பிப்ரவரி 20 ஆம் தேதி 64,560 ஆகவும் உயர்ந்தது. அதனை தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்த நிலையில், 2025, பிப்ரவரி 25 ஆம் தேதி ரூ.64,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 13, 2025) தங்கம் விலை கிராமுக்கு ரூ.55 மற்றும் சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.8,120-க்கும் ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இன்று (மார்ச் 14, 2025) 22 கார்ட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,230-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை தங்கம் விலை ரூ.65,000-க்குள்ளே இருந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக ரூ.65,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.