Crime News: மட்டன் கறி சமைக்காத மனைவியை கணவர் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தெலங்கானா, மார்ச் 13: மட்டன் கறி சமைக்காத மனைவியை, கணவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம், சீரோல் பகுதியைச் சேர்ந்தர் பாலு. இவரது மனைவி மாலோத் கலாவதி (35). இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் பாலு மட்டன் கறியை வாங்கி வந்திருக்கிறார். மட்டன் கறியை உடனடியாக சமைக்க வேண்டும் என்று கலாவதியிடம் கூறியிருக்கிறார்.
மட்டன் கறி சமைக்காத மனைவி
இதற்கு கலாவதி மறுத்துள்ளார். இதனை அடுத்து, கலாவதிக்கும், பாலுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இருவருக்கு நீண்ட நேரமாக வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, பாலு, கலாவதியை அருகில் கிடந்த குச்சியால் கொடூரமாக தாக்கி இருக்கிறார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல்தெரிவித்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மனைவியைக் கொன்று காணாமல் போன கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மட்டன் கறி சமைக்காத மனைவியை, கணவர் கொலை செய்ததது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அற்ப விஷயத்துக்கு இதுபோன்ற கொடூர குற்றங்களை செய்வது முதல்முறையல்ல. முன்னதாக, அண்மையில் குருகிராமில் முட்டை குழம்பு சமைக்காததற்காக ஒருவர் தனது மனைவி கணவர் கொலை செய்துள்ளார்.
அடித்தே கொலை செய்த கணவன்
முட்டை குழும்பு சமைக்க மறுத்த அந்த பெண்ணை, மது போதையில் இருந்த கணவர் சுத்தியல் மற்றும் பெல்ட்டால் அடித்து கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, பிரஷர் குக்கரில் கொதிக்க வைத்து அப்புறப்படுத்தியுள்ளார்.
இதில் கணவர் குரூமூர்த்தி கைதானார். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற சம்பவம் பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, நாட்டில் குடும்ப வன்முறைகள் தொடர்ந்து வரும் சூழலில், இதுபோன்ற சம்பவங்கள் பெண்களிடையே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.