தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் 2025 மார்ச் 22ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க கேரளா, தெலங்கானா, பஞ்சாப் என மூன்று மாநில முதல்வர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிஆர்எஸ் சார்பில் கே.டி.ராமாராவ் கலந்து கொள்கின்றனர்.
சென்னை, மார்ச் 18: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் (Delimitation Row) தொடர்பாக 2025 மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் குழு கூட்டம் தொடர்பாக எம்.எல்.ஏ எழிலன் பேட்டி அளித்துள்ளார். குறிப்பாக இந்த கூட்டத்தில் யார் யார் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து கூறியுள்ளார். அதாவது, இந்த கூட்டத்தில் மூன்று மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்றும் எழிலன் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் 2026ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 1971ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கின்படி 1973ஆம் ஆண்டு தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரை செய்யப்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்
அதன்படி, 543 தொகுதிகள் உருவாக்கப்பட்டன. ஆனால், அதற்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தாலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படவில்லை. ஆனால், 2026ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறி இருக்கிறார்.
இவ்வாறு செய்தால் வடமாநிலங்களின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை அதிளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை குறைவாக உள்ள தென் மாநிலங்களில் தற்போதையதைவிட எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எம்.பி. தொகுதி எண்ணிக்கை பெரும் அளவில் குறைய வாய்ப்புள்ளது.
எனவே, மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைத்தால் எம்.பி எண்ணிக்கை குறையாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
இதுபற்றி ஆலோசனை நடத்த அனைத்து கட்சி கூட்டம் அண்மையில் நடந்தது. அந்த கூட்டத்தில் எம்.பிக்கள் அடங்கிய கூட்டுக் குழுவை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் அடிப்படையில், 2025 மார்ச் 22ஆம் தேதி சென்னையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை வரும் முக்கிய தவைவர்கள் யார்?
இந்த பங்கேற்க தென் மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை அழைக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட் மாநில தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு ஒரு தமிழக அமைச்சர், ஒரு எம்.பி. அடங்கிய குழுக்களை உருவாக்கியது.
அவர்கள், தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு சென்று ஆதரவு திரட்டினர். இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் 2025 மார்ச் 22ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு மாநில தலைவர்கள் சம்மதம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ எழிலன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
அதன்படி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவத் மான் ஆகிய மூன்று மாநில முதல்வர்களும், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், பிஆர்எஸ் சார்பில் கே.டி.ராமாராவ் கலந்து கொள்வதாக எழிலன் கூறியுள்ளார்.