அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்று டாஸ்மாக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை, மார்ச் 19: அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் (Tasmac Liquor Scam) சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் (Madras High Court) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயலில் டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களை துன்புறுத்த தடை விதிக்க வேண்டும் என்றும் சோதனையில் ஆவணங்ககளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்ததை சட்டவிரோதம் என அறிவிக்கவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி (Minister Senthil Balaji) உள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் மனு
அண்மையில் அமலாக்கத்துறை தமிழகம் முழுவதும் 25 இடங்களில் மூன்று நாட்கள் சோதனையில் ஈடுபட்டது. சென்னை எழும்பூர் டாஸ்மாக் அலுவலகம் உட்பட பல்வேறு டாஸ்மாக் ஆலைகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்தது.
அதாவது, பணியிட மாற்றம், போக்குவரத்து ஒப்பந்தம், பார் உரிமம் ஒப்பந்தம், தனியார் மதுபான ஆலைகளுக்கு டெண்டர் வழங்குவது ஆகியவற்றில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. மேலும், டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.30 வரை வசூலித்து இருப்பதுவும் ஆவணங்கள் மூலம் தெரிந்ததாக அமலாக்கத்துறை கூறியது.
இப்படி ரூ.1000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. இந்த முறைகேட்டில் பாட்டில் தயாரிப்பு நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியதாகவும் தெரிவித்திருந்தது. இந்த குற்றச்சாட்டு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தப்பிப்பாரா செந்தில் பாலாஜி?
மேலும், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கு சூழலில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு ஆளும் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது தான் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அமலாக்கத்துறை மீண்டும் தனது வேலையை காட்டியிருப்பதாக செந்தில் பாலாஜிக்கு தலைவலியாக அமைந்துள்ளது.
டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், சமீபத்தில் பாஜக சார்பில் டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டமும் நடைபெற்றது. இந்த விவகாரம் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதோடு, சிறை செல்லவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் தான், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு அனுமதியின்றி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளையோ, ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டாஸ்மாக் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.