Fishermen arrested: தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். மேலும், விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும், மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கி வருவதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, ராமேஸ்வரம் மீனவர்கள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 11 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது.
தமிழ்நாடு மார்ச் 20: தமிழக மீனவர்கள் (Fishermen arrested) 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனுடன், மீனவர்களின் விசைப்படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்கும் நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையே, தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M.K. Stalin) தொடர்ந்து பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் கடிதம் எழுதி வருகிறார். இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது, அவர்களை துப்பாக்கிச் சூடு செய்வது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன.
தமிழக மீனவர்கள் 11 பேர் கைது தகவல்
தற்போது, நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த 11 தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுடன் இருந்த 2 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீனவர்கள் கைது முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்
முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படை மூன்று மீனவர்களை படகுடன் சுற்றிவளைத்து கைது செய்து, மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மீனவர்களை மீட்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்
இந்த சம்பவங்களின் எதிரொலியாக, தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரியும், விசைப்படகுகளை மீட்கக் கோரியும், ராமேஸ்வரம் மீனவர்கள் 19.03.2025 ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்கள் கைது
இந்நிலையில், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையால் மேலும் 11 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தால் மீனவ சமூகத்தில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.