முதற்கட்டமாக அந்த பெண் தனது வீட்டினர் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து ஓடி வந்ததாக தெரிவித்திருக்கிறார். அவரது பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்த அவரிடம் மேலும் விசாரித்தபோது, அந்தப் பெண் கெச் மாவட்டத்தில் உள்ள டாக்ரி கான் கிராமத்தை சேர்ந்தவர் என சொல்லியிருக்கிறார்.
இந்தியாவின் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் (Border Security Force) கடந்த மார்ச் 16, 2025 அன்று ராஜஸ்தானின் கங்கா நகர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்குள் எல்லை தாண்டி நுழைய முயன்ற பாகிஸ்தான் (Pakistan) பெண்ணை பிடித்து விசாரித்திருக்கின்றனர். இது தொடர்பாக நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின் படி, அந்த பெண்ணை கைது செய்து தீவிர விசாரணை செய்தபோது அவர் பாகிஸ்தானின் பாலோசிஸ்தான் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்திருக்கிறது. அந்தப் பெண் இன்னும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கவில்லை எனவும் எல்லை தாண்டி வந்ததற்கான காரணம் குறித்து எல்லை பாதுகாப்பு படையினரும் புலனாய்வு அமைப்பும் (Investigation Agency) விசாரித்துவருவதாகவும் டிஎஸ்பி பிரஷாந்த் கௌசிக் தெரிவித்திருக்கிறார்.
கணவரின் கொடுமையிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு நுழைய முயன்ற பாகிஸ்தானி பெண்
முதற்கட்டமாக அந்த பெண் தனது வீட்டினர் செய்த கொடுமை தாங்க முடியாமல் தப்பித்து ஓடி வந்ததாக தெரிவித்திருக்கிறார். அவரது பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்த அவரிடம் மேலும் விசாரித்தபோது, அந்தப் பெண் கெச் மாவட்டத்தில் உள்ள டாக்ரி கான் கிராமத்தை சேர்ந்தவர் என சொல்லியிருக்கிறார். அவர் தனது கணவர் கடை நடத்தி வருவதாகவும் தன்ன அவர் மிகவும் கொடுமைபடுத்துவதாகவும் அவரிடம் இருந்து தப்பிக்கவே இவ்வாறு செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்.
வழிகாட்டிய கூகுள் மேப்
இந்த நிலையில் அவரது மொபைல் போனை பரிசோதித்த போது அவர் கூகுளில் இந்தியாவின் பெண்கள் நிலை குறித்து தேடியிருக்கிறார். பாகிஸ்தானை விட இந்தியாவில் பெண்களின் நிலை சிறப்பாக இருப்பதாக நினைத்து இந்தியாவுக்குள் நுழைய அவர் நினைத்திருக்கிறார் என பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதில் முக்கியான விஷயம் என்னவென்றால் அவர் இந்தியாவிற்குள் நுழைய கூகுள் மேப் பயன்படுத்தியிருக்கிறார்.
அனுப் நகர் பகுதியில் உள்ள விஜேதா எல்லைப் பகுதியில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக அனுப்நகர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என பாதுகாப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். இதுவரை உளவு பார்த்ததாகவோ அல்லது சந்தேகத்திற்கு குரிய செயல்களில் ஈடுபட்டதாகவோ எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். இருப்பினும் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும் என கூறுகின்றனர்.
இதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சீமா குலாம் ஹைதர் என்ற பாகிஸ்தானிய பெண் தனது 4 குழந்தைகளுடன் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பப்ஜி விளையாட்டின்போது இந்தியரான சச்சின் என்பவருடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது. பின்பு காதலாக மாறியிருக்கிறது. இதனையடுத்து அவர் நேபாளம் வழியாக இந்தியாவிற்கு நுழைந்தார். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் அரசியல் காரணங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட நோக்கங்களுக்காக பலத்த பாதுகாப்பு மிக்க இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடக்கும் அளவுக்கு பாதிப்புகளை சந்தித்துள்ளதை உணர்த்துகிறது.