TVK General Body Meeting | தமிழக வெற்றிக் கழகம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அதன் அடுத்த பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அது தொடர்பாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை, மார்ச் 21 : தமிழக வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri Kazhagam) பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் நிர்வாகிகள் ராமச்சந்திரா கலையரங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மார்ச் 28, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்த நிலையில், அதற்கான பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வரும் தவெக
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். கட்சி தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே அவர் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பொதுமக்களை சந்திப்பது, பொதுக்குழு கூட்டம், கட்சியை கட்டமைப்பது உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், விஜய் மேலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகி என சிலர் விஜயின் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். இவ்வாறு தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்து பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நிலையில், தவெகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தவெகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் – புஸ்ஸி ஆனந்த அறிவிப்பு
சென்னை, திருவான்மியூரில் ராமச்சந்திர கலையரங்கில் மார்ச் 28, 2025 அன்று காலை 9 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தார். இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் அழைப்பு கடிதம் மற்றும் கட்சியின் அடையாள அட்டையுடன் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.