கோவை : கோவை மாவட்டம், 100 சதவீத எழுத்தறிவித்தல் பெற்ற, மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசின் ‘புதிய பாரத எழுத்தறிவு திட்டம்’ 2022ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்ட எழுத்தறிவு இல்லாத நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கல்வி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம், இந்திய அரசு பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையுடன் இணைந்து, 2024-2025 கல்வியாண்டில்,கோவை மாவட்டத்தில் திட்டத்தின் முதல் கட்டமாக 20,199 நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கி, அவர்களுக்கான தேர்வுகளும் முடிக்கப்பட்டன.
தற்போது, திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பேரூர், பொள்ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு), சர்க்கார்சாமக்குளம், சுல்தான்பேட்டை, சூலூர், தொண்டாமுத்தூர் மற்றும் வால்பாறை ஆகிய வட்டார மையங்களில் எழுத்தறிவு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், 1,782 ஆண்கள் மற்றும் 5,464 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 7,246 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு ஜூன் மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த திட்டத்தின் கீழ் அதிகமான நபர்களுக்கு எழுத்தறிவு பயிற்சி வழங்கப்பட்டது.
பொதுவாக, இலக்கு நிர்ணயிக்கப்படும். ஆனால், இந்த முறை, எழுதப் படிக்கத் தெரியாத அனைவரையும் கணக்கிட்டு, அவர்களுக்கு கல்வி வழங்க அறிவுறுத்தப்பட்டது.
கோவை ஒரு பெரிய மாவட்டம் என்பதால் இங்கு பயில்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.ஏற்கனவே, நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் 100 சதவீத எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக அறிவிக்கப்படவுள்ளன. தற்போது கோவையில் பயில்பவர்கள் தேர்வை வெற்றிகரமாக முடித்தவுடன், வரும் நவம்பர் மாதத்திற்கு மேல், கோவையும் 100 சதவீத எழுத்தறிவை அடைந்த மாவட்டமாக அறிவிக்கப்படும்’ என தெரிவித்தனர்.